search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudakkathan Keerai Rasam-soup"

    • வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.
    • வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இக்கீரைக்கு 'முடக்கறுத்தான்' (முடக்கு + அறுத்தான் எனப்பெயர் வந்தது. முடக்கு நோயை அகற்றும் தன்மை மிக்க இக்கீரை ஒரு கொடி வகையை சார்ந்தது. வேலிகளில் பற்றி செழிப்பாக படர்ந்து வளரும்.

    நாற்பது வயது கடந்த பலருக்கு மூட்டுகளில் நீர் கோர்த்து தாங்கமுடியாத வலி ஏற்படும். தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பலவகையான வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    உடல்வலி, மூட்டுகளில் வீக்கம், உடல் கனத்து வலி தோன்றும் பொழுது, இரண்டு கைபிடி முடக்கறுத்தான் கீரையை 200 மி.லி. நீரில் இட்டு, ஒரு தேக்கரண்டி சீரகமும் கலந்து கொதிக்க வைத்து அருந்த உடல் வலி நீங்கும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.

    பெண்களுக்கு சூதகவலி, மற்றும் சூதக தடை, மாதவிடாய் சமயம் தோன்றும் வலிக்கு இரண்டு கைபிடி முடக்கறுத்தான் இலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து 200 மிலி நீரில் கொதிக்க வைத்து அருந்த வயிறு மற்றும் தொடை, இடுப்பு பக்கங்களில் உண்டாகும் வலி நீங்கும். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.

    முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முடக்கறுத்தான் இலை- 2 கை பிடி அளவு

    பூண்டு- 5 பல் அரைப்பதற்கு

    துவரம் பருப்பு- 1 ஸ்பூன்

    மிளகு- ½ ஸ்பூன்

    சீரகம்- 1 ஸ்பூன்

    (மேற்கண்ட துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்)

    காய்ந்த மிளகாய்- 2

    புளி- நெல்லிக்காய் அளவு (200 மி.லி. நீரில் கரைத்து கொள்ளவும்)

    தக்காளி-1 பொடிதாக அரிந்து கொள்ளவும்

    நெய்- 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து முடக்கறுத் தான் கீரை மற்றும் பூண்டை ஒரு தேக்கரண்டி நெய் இட்டு லேசாக வதக்கி சற்று ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். புளி தண்ணீரை தக்காளி கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

    நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொதிக்க விடவும்.

    இறுதியாக அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் பூண்டு கலவையை இட்டு கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிது கடுகு தாளித்து இறக்கி கொள்ளவும்.

    இதை சூப்பாகவும், சூடான சாதத்துடன் கலந்து ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். வயிற்று உப்புசம், மலச்சிக்கல், மூட்டுவலி, அடிவயிற்று வலிக்கு இந்த ரசம் செய்து பயன்படுத்தலாம். மூல நோய் வள்ளவர்களுக்கு தொடைப்பகுதியில் வலி ஏற்படும். அப்பொழுது இந்த ரசம் 100 மி.லி. சாப்பிட வலி குறையும்.

    ×