search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "multiple"

    ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ள மோசடி மன்னன் நிரவ் மோடி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. #NiravModi #FIR #Passport
    புதுடெல்லி:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் நிரவ் சோக்சி உள்ளிட்டவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக மோசடி மன்னன் நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தலா 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி முதலில் இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் பெல்ஜியத்தில் இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்தன. அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.



    இந்த நிலையில், நிரவ் மோடியிடம் இப்போது 6 பாஸ்போர்ட்டுகள் இருப்பது தெரிய வந்து உள்ளது. அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4 பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. நிரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டு வருகிற 2 பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில், அவரது முழுப்பெயர் உள்ளது. மற்றொன்றில் முழுப்பெயரின் முதல் பாதி பெயர் உள்ளது.

    இந்த பாஸ்போர்ட், இங்கிலாந்து நாட்டின் 40 மாத விசாவுடன் கூடியது ஆகும். இதை பயன்படுத்தித்தான் அனேகமாக அவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருவதாக நம்பப்படுகிறது.

    அவரது முதல் பாஸ்போர்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது, நினைவுகூரத்தக்கது. இரண்டாவது பாஸ்போர்ட்டும் பின்னர் இந்திய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இவ்விரு பாஸ்போர்ட்டுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது பற்றி சர்வதேச போலீசின் கவனத்துக்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொண்டு சென்று உள்ளது. ஆனால் ஒரே சீரான சர்வதேச வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்ய முடியவில்லை.

    எனவே அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாகவும் பயணங்கள் செய்கிறார். அவரது பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்த உத்தரவுகள், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்டு அல்லது சர்வதேச தேடல் நோட்டீஸ் பிறப்பிக்க கோரும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    எனவே ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை நிரவ் மோடி பயன்படுத்தி வருவது கிரிமினல் குற்றம் ஆகும். அது மட்டுமின்றி தூதரக அந்தஸ்து அல்லது அரசு அதிகாரி அல்லது பிற சிறப்பு காரணங்கள் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பதுவும் குற்றம் ஆகும்.

    எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ளது தொடர்பாக முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நிரவ் மோடிக்கு எதிராக புதிய குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #NiravModi #FIR #Passport #Tamilnews
    ×