search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "myanmmar Tamil people"

    • மியான்மரில் சிக்கித்தவித்த தமிழர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
    • முதற்கட்டமாக நேற்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

    சென்னை:

    இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள், தாய்லாந்து நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில், நல்ல சம்பளத்தில், நிரந்தரமான வேலை என்று ஆன்லைனில் விளம்பரம் செய்தது.

    அதை பார்த்து படித்த இளைஞர்கள், பலருக்கு ஆசை ஏற்பட்டது. இதை அடுத்து இளைஞர்கள் பலர் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு, வெளிநாட்டு வேலை மோகத்தில் தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், வெளிநாட்டு வேலை ஆசையில் சென்றனர்.

    ஆனால் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும், மியான்மர் நாட்டிற்கு வலுக்கட்டாயமாக வற்புறுத்தி அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை சட்டத்துக்கு புறம்பான பல்வேறு பணிகளை செய்யும்படி கட்டாயப்படுத்தினர்.

    தகவல் தொழில்நுட்ப துறையில் கவுரவமான வேலை என்று நம்பி வந்த இளைஞர்களை, மியான்மர் நாட்டில் கொத்தடிமைகளாக நடத்தினர். சட்டத்துக்கு புறம்பான, சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தியதால், அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த வேலைகளை செய்ய முடியாது, எங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று அந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல், இளைஞர்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்து, நாங்கள் சொல்கிற வேலையை செய்ய வேண்டும் என்று கொடுமைப்படுத்தினர்.

    இதை அடுத்து அந்த இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசு, இந்த கும்பலிடம், எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்று ஆய்வு செய்தது. சுமார் 300 இந்தியர்கள், அதில் 50 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தது.

    உடனே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மியான்மரில் சிக்கிய 50 தமிழ் இளைஞர்களையும் மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு பிரதமர் மோடிக்கு அவசர கடிதமும் எழுதினார். அதை போல் மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன.

    இதை அடுத்து மத்திய அரசு, மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தகவல் கொடுத்து, இந்திய இளைஞா்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி முதற்கட்டமாக இந்திய இளைஞர்கள் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் மியான்மரில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்பு தாய்லாந்து நாட்டிலிருந்து விமான மூலம் நேற்று பிற்பகல் டெல்லி விமானநிலையம் வந்து சேர்ந்தனர்.

    அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 இளைஞர்களும் நேற்று இரவு 8.30 மணி விமானத்தில் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் டெல்லி விமான நிலையத்தில், அவர்களுக்கு குடியுரிமை சோதனை தாமதம் ஆனதால், இன்று அதிகாலை 1.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தனர்.

    அவர்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

    வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் முயற்சியினால் இன்று தாயகம் திரும்பி உள்ளோம். இதற்காக உதவிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    வெளிநாடுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் சென்ற எங்களுக்கு வழங்குவதாக கூறிய வேலையை விட்டுவிட்டு கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி செயல்களில் ஈடுபடும்படி செய்தனர்.

    அந்த வேலைகளை செய்ய மறுத்த எங்களுக்கு உணவு வழங்க மறுப்பது, பாஸ்போர்ட்டுகளை பிடுங்கி வைப்பது மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களையும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்தனர்.

    வேலை குறித்து விவரங்களை ஏஜெண்டுகள் முழுமையாக தெரிவிக்கவில்லை. தாய்லாந்து சென்ற பின்னர்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்.

    உடனடியாக முயற்சி செய்து எங்களை காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எஞ்சியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×