search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nasheed of terror conviction"

    பயங்கரவாத வழக்கில் தொடர்புப்படுத்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்தது. #Nasheed #maladives
    கொழும்பு:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.  கடந்த 2012-ம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம்  நஷீத், பறிகொடுத்தார். 

    அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். 

    சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் ஆபரேசன் நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. 

    அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து, ஆபரேஷனுக்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2016-ம்  ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.

    சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு திரும்பாமல் இலங்கை நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.

    மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற நிலையில் முகமது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார்.

    இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் முஹம்மது நஷீத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது வக்கீல் ஹிஸான் ஹுஸைன்  ஆஜராகி வந்தார்.

    இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். #Nasheed #maladives
    ×