search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Partition"

    • திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
    • பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.

    தேசிய மகளிரணி தலைவரும், பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), 'இந்தியா ஒழிக' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வு நடந்ததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு புகார்கள் வந்துள்ளன. மத்திய பாஜக அரசின் உத்தரவுப்படி, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வை வெளிப்படை தன்மையுடன், நியாயமான முறையில் நடத்திட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம். போராடலாம். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், 'நீட் எதிர்ப்பு' என்ற பெயரில், தேச பிரிவினையை தூண்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.

    நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில், 'இந்தியா ஒழிக' என்பது மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' என்ற பிரிவினையை தூண்டும் வாசகங்கள் அதற்கான பிரின்டிங் பிளாக்' தயாரிக்கப்பட்டு இதிலிருந்து தேசப்பிரிவினை பிரச்சாரத்தை அமைப்பு ரீதியாக திட்டமிட்டு செயல்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏனெனில், திமுக, 'தனித் தமிழ்நாடு' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி, நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.

    இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×