search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navratri festival"

    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
    • பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.

    பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.

    கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

    10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கொலு அமைக்கப்பட்டது
    • பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டது.

    தினந்தோறும் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது.

    தெய்வங்கள், புராண இதிகாச நாயகர்கள், குருமார்கள், தேசத்தலை வர்கள் என நமது பாரம்பரிய பண்பாட்டினை பறை சாற்றும் வகையில் அழகிய பொம்மைகளை வைத்திருந்தனர்.

    பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் காலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டா பிஷேகத்துடன் நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் நவராத்திரி சிறப்பு பூஜையும், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.

    இதில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.
    • 3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோம நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    கடந்த 15-ந் தேதி முதல் நவராத்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் அம்மன் சன்னதி அருகே கண்ணைக்கவரும் வகையில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஆனந்தவல்லி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    தினமும் உற்சவ அம்ம னுக்கு பூஜைகள், தீபாரதனை கள் நடைபெற்று அதன்பின் துர்க்கை அம்மனுக்கு பூஜை கள் நடைபெற்று வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனையும் கொலு அலங்காரத்தையும் தரிசித்து செல்கின்றனர்.

    நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். தினமும் மாலையில் கோவில் மண்ட பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் வேதியே ரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் மகாபஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில்3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன்கோவில், செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

    • திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
    • இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் அம்மன் கேதராம்பிகை அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    மேலும் கொலு மண்டப மேடையில் பல்வேறு திருத்தலங்கள், புராணங்கள், இதிகாசங்கள், புகழ் பெற்ற தலங்கள் குறித்த பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த கொலு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு நாளும் பத்ரகாளியம்மன் மூலவருக்கு அம்பிகை, கங்கணதாரணம்பிகை, குமுதாம்பிகை, மாங்கல்யதாராணம்பிகை உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கலசா பிசேகம், அன்னபாவாடை சாற்றல், சர்ப்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நவராத்தி விழா பூஜைகள் நிறைவு பெறுகிறது.

    • விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

    விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று சாமி உற்சவத்தின் போது 15 பேர் கொண்ட ஆந்திர கரகாட்டகுழுவினர் நடனம் ஆடினர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட கரகாட்டக் கலைஞர்கள் வரிசையாக நின்று நடனமாடினர்.

    இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

    • தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
    • மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.பி.என்.காலனி 5-வது வீதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமியின் வீட்டில் 25-வது ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதையொட்டி அவரது வீட்டில் 9 படிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்து கடவுள் சிலைகள், இயேசு, மாதா சிலை மற்றும் மும்மதத்தை குறிக்கும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா, அம்பேத்கர், அப்துல்கலாம், அன்னை தெரசா, விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலை மற்றும் கம்பா நதியில் ஏகாம்பரேஸ்வரை ஏழவார்குழலி வழிபடும் சிலை, நவதுர்கை, சிவதாண்டவம், லலிதாம்பிகை தர்பார், சுருட்ட பள்ளீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். பூஜையில் விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, அவரது மனைவி ராதா, மகன் மாதேஸ்வரன், மகள்கள் கவிதா, மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
    • திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விண்வெளி உலக மாதிரி, ஏலியன், சந்திராயன்- 3 ஏவுகணை, குண்டு தாங்கி வானத்தில் செல்லக் கூடிய படைக்கருவி , செட்டியார் கடை, கொலு பொம்மைகள் ஆகியவற்றைக் கொண்டு நவராத்திரி கொலு அமைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் வழிபட்டு மகிழ்ந்தனர். நவராத்திரியின் சிறப்புமிக்க ஒன்பது நாள் கொண்டாட்டம் மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியையும், பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கின்றது. விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர். பண்டிகையாக கொண்டாடும் விதமான நவராத்திரி கொண்டாட்டம் நாம் அனைவரும் உணர்ந்து அனுஷ்டித்து நன்மை பெறுவோம் என்று கிட்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் நிவேதிகா, மாணவ- மாணவியர்களிடம் எடுத்துக் கூறினார்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • பழனியில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
    • 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது.

    பழனி:

    முருகபெருமானின் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் முதலில் காப்பு கட்டப்பட்டது. கோவிலில் உள்ள அம்மன், முருகன், வள்ளிதெய்வானை ஆகியோருக்கும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையின் போது முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.

    கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் வெவ்வேறு அம்மன்கள் அலங்காரம் செய்யப்படும். 9ம் நாள் விழாவாக வருகிற 23ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலை சாமி வந்தடைந்து பராசக்திவேல் மலைக்கோவில் அடைந்த பின்பு அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்றுமுதல் வருகிற 23ம் தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும், 24ம் தேதி முதல் தங்கரத புறப்பாடு மீண்டும் புறப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
    • பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,

    19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர்.
    • நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் துர்க்கை, விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் இடம்பெற்று இருந்தன.

    பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி அங்கு ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இதில் மாணவிகள் பலர் வேடம் அணிந்து, மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆடினர். இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    அப்போது மேடையில் சாமி வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது வாயில், மண்எண்ணையை ஊற்றி அதை கையில் வைத்திருந்த பந்தத்தில் ஊதி சாகசம் செய்ய முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முகத்தில் தீப்பற்றியது. இதைபார்த்ததும் அதிர்ச்சியான அங்கிருந்தவர்கள் ஓடி சென்று விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

    இதில் மாணவிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மாணவியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவி, அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
    • 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும்.

    குழித்துறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு, குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு சரஸ்வதி தேவியம்மனை யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய விக்ரகங்களை, பல்லக்கிலும், சுமந்தும் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் இந்த சாமி விக்ரகங்கள் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக-கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோவில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது.

    வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று இந்த சாமி விக்ரகங்கள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்து அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தமிழக இந்து அறநிலைய துறையினர், கேரளா இந்து அறநிலை துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி விக்ரகங்கள் இன்று நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கலும், நாளை திருவனந்தபுரம் சென்றடைகிறது.

    அங்கு கிழக்கு கோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யா சாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும், பூஜைக்கு வைத்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.

    பின்னர் 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும். அப்போதும் பொதுமக்கள் வழி நெடுக வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் குமரியில் அந்தந்த கோவில்களில் வைத்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இந்த சாமி விக்ரகங்கள் செல்லும் வழியில் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் மா, பலா, வாழை, தென்னை ஓலை களாலும் அலங்கரித்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.

    ×