search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neduvasal village"

    கஜா புயல் காற்றால் பல்வேறு திசைகளில் பறந்து சென்ற 50 சதவீதம் வவ்வால்கள் மீண்டும் ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளதால் நெடுவாசல் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #GajaCyclone #Bats
    புதுக்கோட்டை:

    கஜா புயலின் பாதிப்பு மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. இயற்கை சீற்றத்தை முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட அவை பல இடங்களில் பலியாகியும், சில இடங்களில் மறுவாழ்வும் பெற்றுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கரில் சுற்றிலும் புதர்ச்செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. அந்த ஆலமரத்தின் அடியில் அய்யனார் கோவில் உள்ளது.

    இந்த மரத்தில் இருந்து ஒடிந்து விழும் ஒரு குச்சியை கூட யாரும் விறகுக்காக தொடுவது இல்லை. அதே போல் இந்த மரத்தில் உள்ள வவ்வால்களை யாரும் வேட் டையாடுவதும் இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இதே இடத்திற்கு வந்து விடுவது வழக்கம்.

    அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தைக் கேட்டு தான் ஊரே எழும். இந்த வவ்வால்கள் நலன் கருதி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிப்பது கிடையாது.



    இந்நிலையில் கஜா புயலின் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் பெரும்பாலான கிளைகள் முறிந்து விட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்த மரத்தில் இருந்து எங்கெங்கோ சென்று விட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்து விட்டன.

    10 நாட்கள் ஆகி சற்றே இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பல்வேறு திசைகளில் பறந்து சென்ற வவ்வால்கள் மீண்டும் இந்த ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளன. அந்த மரத்தில் எஞ்சியுள்ள கிளைகளிலும், குச்சிகளிலும் தங்கியுள்ளன.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், இம்மரத்தில் இருந்த பாதி வவ்வால்கள் புயல் காற்றால் இறந்து மரத்தடியிலேயே விழுந்து விட்டன. இங்கிருந்து வெளியேறிய சில நாட்கள் வேறு எங்கோ வசித்த வவ்வால்கள் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் இந்த மரத்துக்கே வந்திருப்பது பிரிந்து சென்ற சொந்தங்கள் எங்களை மீண்டும் பார்க்க வந்தது போல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அதே சமயம் புயலால் இப்பகுதியில் இருந்த பழத் தோட்டங்கள் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில் இந்த வவ்வால்கள் கடந்த ஒரு வாரமாக பட்டினியால் வாடுவதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றார்.  #GajaCyclone #Bats


    ×