search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new attempt"

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் சரத்பவார் கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியால் பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் காங்கிரசுக்கு வெறும் 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.

    இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.


    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களுடன் இணைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு ஏற்றவாறு சரத் பவாரின் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன் பாராளு மன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது’.


    இவ்வாறு அவர் கூறினார்.

    மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்பவாருக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இணைந்தால் காங்கிரசின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் 57 ஆக அதிகரித்து எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

    அத்துடன் சரத்பவாருக்கு காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    காங்கிரசின் இந்த யோசனையை சரத்பவார் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே கருதப்படுகிறது.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது, ‘மராட்டியத்தில் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நன்கு வளர்த்துள்ளார். இதனால் அவர் காங்கிரசுடன் தனது கட்சியை இணைப்பது கடினம்’ என்றனர்.

    பாராளுமன்றத்தில் நடிகை சுமலதா (கர்நாடகம்), நவ்னீத் ரவிரானா (மராட்டியம்), நம்பாகுமார் சரணியா (அசாம்), மோகன் பாய் டெல்கர் (தத்ரா நாகர் ஹவேலி) ஆகியோர் சுயேச்சை எம்.பி.க்களாக உள்ளனர்.

    இவர்களது ஆதரவை பெறவும் காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    ×