search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NGT orders"

    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #SterliteIssue
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக வாதம் நடைபெற்றது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தலைமை நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது.

    இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியம், சந்துரு ஆகியோரின் பெயர்களை தலைமை நீதிபதி கோயல் பரிந்துரை செய்தார். இவர்களில் யாரிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சந்துரு இவ்வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவன வழக்கறிஞரின் கருத்தை கேட்டபிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.



    முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 16, 17-ம் தேதியில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 3.5 லட்சம் டன் காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றங்கரை முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேசமயம், ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதனை ஏற்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அத்துடன், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் ஆலையை மூடினீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆலையை மூடும்போது உள்ள ஆதாரத்தையாவது தாக்கல் செய்யுங்கள் என்று வலியுறுத்தினர். அதற்கும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. கால அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, ஆதாரம் இல்லாமல்தான் ஆலையை மூடியிருப்பதாகத்தான் தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterliteIssue
    ×