search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrition Center"

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரால்1955ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ம் ஆண்டு முதல் அரசு தொடக்க பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் 1982ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்களும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது. 60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநிலஅரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கி இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற மத்திய பா.ஜக. மோடி அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாக குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

    மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளாத மாநில அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தை காட்டாமல், மாறாக 8000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அ.தி.மு.க.வின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளை திறக்க முயலும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடுவிழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தது.

    ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஒரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter
    ×