search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutrition centres"

    தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. #NutritionStaff
    சென்னை:

    சத்துணவு திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைத்தது. இதனால், தமிழக அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவை சமாளிக்க 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவாக மதிய உணவு சாப்பிடும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்துணவு ஊழியர்கள் இன்று  மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு சத்துணவு திட்டத்துக்கு வழங்கும் மானியத்தை குறைத்ததன் காரணமாக 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையத்தை மூடிவிட்டு அந்த மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு உணவு சமைத்து அந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், அங்கு பணிபுரிந்த அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் எங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என சமூகநல ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 27.12.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுவது இல்லை. அதே மையத்தில் பணியாற்றி வரும் சமையலர் அல்லது உதவியாளர் மட்டும் தொடர்ந்து அங்கு பணியாற்றவும், அமைப்பாளர்கள் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்கள் விருப்பத்தை பெற்று பணிமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும், 2019 டிசம்பர் 31-ந் தேதி வரை வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் அதே மையத்தில் பணிபுரிவார்கள் எனவும் சமூகநல ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். எனவே, இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NutritionStaff
    ×