search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutritional project tender"

    வருமான வரி சோதனையில் சிக்கிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் பங்கேற்ற சத்துணவு திட்ட டெண்டர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை வினியோகம் செய்யும் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து கடந்த 5-ந் தேதி சென்னை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டெல்லி மற்றும் மராட்டிய மாநிலம் மும்பை உள்பட 76 இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், கம்பெனிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய இந்த சோதனையில், ரூ.17 கோடி ரொக்க பணம் மற்றும் 10 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல போலியான பெயரில் நிறுவனங்கள் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வருமான வரி சோதனையின் இறுதியில் கிறிஸ்டி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ரூ.1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் விடும் பணி ஏற்கனவே அறிவித்தபடி சென்னை தரமணி பகுதியில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆண்டுக்கு சுமார் 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி மதிப்பிலான டெண்டர் ஆகும். இதற்கான டெண்டரில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் உள்பட மொத்தம் 6 நிறுவனங்கள் பங்கேற்றன.

    இதில் வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான 3 நிறுவனங்களும் அடங்கும். வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாது என்று டெண்டரில் பங்கேற்ற பிற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சமூக நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால், கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான 3 நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்பதில் உறுதியாக இருந்தன. ஒரு கட்டத்தில் எதிர்ப்பு வலுத்ததால் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்தனர். சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

    பின்னர் டெண்டரில் பங்கேற்ற 6 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான புதிய டெண்டர் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற விவரம் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 
    ×