search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "offered bicycle"

    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமையாக உள்ளது. ஏனென்றால் நான் படித்த பள்ளி இது. நாங்கள் படிக்கும் போது எனது ஊரான தமராக்கியில் இருந்து 16 கி.மீ. சைக்கிளில் வந்து தான் படித்தேன். இன்று அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்குவது மேலும் பெருமையாக உள்ளது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ரூ.9 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

    தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளையும் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் ஆவின் சேர்மன் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கோபி, வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்தின் நன்றி கூறினார். 
    ×