search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opinion meeting"

    தருமபுரியிலும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கருத்து கேட்பு கூட்டத்துக்கு போலீஸ் தடை வித்துள்ளதால் அப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    தருமபுரி:

    காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் செய்யாறில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று கருத்து கேட்பதாக இருந்தார்.

    இந்த கூட்டங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

    இதேபோல தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி கிராமத்திலும், அரூர் வட்டம் முத்தானூர் கிராமத்திலும் இன்று பிற்பகலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளிடம் கருத்து கேட்க இருந்தார். இந்தக் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க அரூர் டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் மறுத்து உள்ளார்.

    இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் போலீஸ் எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவுக்கு பதில் அளித்து டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    அரூர் உட்கோட்ட காவல் சரகத்தில் தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 30(2)-ன் படி வருகிற 30-ந் தேதி வரை தடை அமலில் உள்ளது. இருளப்பட்டி, முத்தானூர் கிராமங்களில் நில அளவீடு மற்றும் மதிப்பீட்டு பணிகள் முடிவடையவில்லை, நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழலில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினால் மக்களின் மன நிலையின்படியும், எங்களது ரகசிய தகவலின் படியும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, கருத்து கேட்பு கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாவட்ட தலைமை இடமான தருமபுரியில் உரிய அனுமதி பெற்று கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பாதிக்கப்பட்டுள்ள தொகுதி மக்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முறைப்படி உரிய முறையில் காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து இருந்தோம். கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை.

    மீண்டும் சட்டரீதியாக முறையான அனுமதி பெற்று பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராம மக்களையும் நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீஸ் அனுமதி தராததால் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி ரத்தாகி விட்டது. என்றாலும் பா.ம.க.வினர் விவசாயிகளை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு, இருளப்பட்டி, கோபிநாதம் பட்டி ஆகிய பகுதிகளில் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×