search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistanis"

    மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. #Pakistanis #TerroristList
    வாஷிங்டன்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அவர்கள், அப்துல் ரகுமான் அல் தாகில், ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆவார்கள்.

    இவர்களை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக அப்துல் ரகுமான் அல் தாகில் சர்வதேச பயங்கரவாதியாகவும், 3 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்தன.

    ஆனால் 3 பேருமே சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து இப்போது அது குறித்த முறையான அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.

    3 பேரில் அப்துல் ரகுமான் அல் தாகில், இந்தியாவில் 1997-2001 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் செயல்பாட்டு தலைவர்.

    2004-ம் ஆண்டு இவரை ஈராக்கில் வைத்து இங்கிலாந்து படைகள் சிறை பிடித்தன. அதைத் தொடர்ந்து அவர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க காவலில் மாறி மாறி வைக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் அவரை விடுவித்ததும், அவர் 2016-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு வந்து, அதன் ஜம்மு பிராந்திய தளபதி ஆனார்.

    இப்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து இருப்பதால், இவரால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு நிதி ஆதாரங்கள் திரட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

    பிற நடவடிக்கைகளுடன், அமெரிக்க எல்லைக்குள் உள்ள இவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்கர்கள் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மற்ற இரு பயங்கரவாதிகளான ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆகியோர் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நிதி அளிக்கவும் உதவி உள்ளனர் என அமெரிக்க நிதித்துறை மற்றும் நிதி உளவுப்பிரிவு கீழ்நிலை செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறினார்.  இவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.

    ஹமீத் அல் ஹசன், 2016-ம் ஆண்டு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான பாலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளைக்காக வேலை செய்து உள்ளார். லஷ்கர் இ தொய்பாவுக்காக இவர் தனது சகோதரர் முகமது இஜாஸ் சப்ராசுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி அனுப்பி வந்து இருக்கிறார்.

    அப்துல் ஜப்பாரும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி சேகரித்து அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்து உள்ளார்.

    ஒரே நேரத்தில் பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி இருப்பது, புதிய ஆட்சி அமைய உள்ள நேரத்தில் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    ×