search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palak Pasta"

    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு பற்கள் - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    காளான் - 10
    பசலைக்கீரை - 1 கட்டு
    டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.  

    வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி  சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும். 1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×