என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni festival"

    • கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)

    காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)

    வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முத லாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவை யொட்டி கடந்த 16-ந்தேதி மாலை கோவில் முன்பாக சூரசம்காரமும், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடந்தது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல் சுமங்கலி பெண்கள் மஞ்சள் தாலி கயிறை மாற்றிக்கொண்ட னர்.

    இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப வெட்டி வேரால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் குன்றத்து முருகனுக்கு அரோ கரா என்ற பக்தி பெருக்கு டன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கிரிவ லப்பாதை வழியாக வயல்வெளிகளை ஒட்டிய பகுதியில் ஆடி அசைந்து சென்று பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷமும், மங்கள வாத்தி யங்களின் ஒலியும் விண்ணை முட்டியது.

    தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து பகல் 12.45 மணிக்கு தேர் மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. அப்போதும் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்ய பிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராய ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
    • விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.

    தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.

    • விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
    • பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.

    அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

    தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

    திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.

    இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • மேலாடையின்றி புனித நீராடி வினோத வழிபாடு.
    • 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லியார், அய்யனார் சுவாமிகள் அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அதாவது இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படாமல் இருந்தது.

    இதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பகையை மறந்து பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    முன்னதாக 20 ஆண்டு பகையை மறந்து ஊரே ஒன்றுபட்டு பங்குனி பொங்கல் நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அருகே உள்ள செவந்தான் ஊரணியில் ஆண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் புனித நீராடினர்.

    பகை ஏற்பட்ட போது ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். அந்த சாபம் நீங்குவதற்காக கிராமத்தினர் இந்த புனித நீராடலில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு புனித நீராடி 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.


    அதனைத் தொடர்ந்து ஊர் மந்தையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரிசையாக தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலையாள சாத்தையா அய்யனார் கோவிலை வந்த டைந்தனர். பின்னர் அங்கு அனைவரும் பொங்கல் வைத்தனர்.

    பின்னர் ஸ்ரீவில்லியார் சுவாமிக்கு மஞ்சிகள் கட்டிய பசுமாடுகள் காளைகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த பங்குனி பொங்கல் விழாவில் கிராம பொதுமக்கள், பரம்பரை அறங்காவலர்கள், அனைத்து கோவில் பூசாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் மத நல்லிணத்தித்திற்கு அடையாளமாக கரிசல்பட்டி இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வருகை தந்து பூசாரியிடம் வழங்கினர்.

    20 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா நடந்துள்ளதால் வரும் காலங்களில் தங்கள் கிராமம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர். 

    • திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழாவின் போது திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்துமுருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 29-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5 45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது.
    • முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்த பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். இங்கு பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம், வான வேடிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரர் சக்திவேல், மாத முறைகாரர் சின்னமணி மற்றும் உறவின் முறை டிரஸ்டிகள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசும் நேர்த்திகடன் உட்பட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று முதல் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டு, விரதம் கடைபிடித்தனர்.அடுத்த மாதம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, ரிஷபம், பூதம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வரும். ஏப்ரல் 4-ந்தேதி கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 5-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழா நடைபெறும்.

    இதில் தமிழகத்தில் எங்குமில்லாத விநோத வழிபாடான பக்தர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி, கோவிலை வலம் வருவார்கள். 7-ந்தேதி 2007 திருவிளக்கு பூஜை, 8-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதி நடக்கிறது.
    • தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.

    திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது
    • கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது.

    சப்தவிடங்க தலங்களில் முதன்மையானதும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் விளங்குகிறது.

    இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. 96 அடி உயரத்தில் வீதி நிறைந்த அகலத்தோடு நடைபெறும் தேர்த் திருவிழாவை காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இத்தேரோட்டம் நடைபெறுவதால் இதனை ஆழி தேரோட்டம் என்றும் பக்தர்கள் புகழ்கின்றனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    அதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா தொடங்குவதை முன்னிட்டு கோவிலில் கொடி மரத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விழா உற்சவம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து வரும் 27-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வெள்ளி வாகனம், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
    • 17-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 8-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று இரவில் தொடங்கியது. இதையொட்டி நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி இன்று அதிகாலை 3.20 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர். அப்போது நம்பிசுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    10-ம் நாளான வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜண்ட் பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏப்ரல் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 29-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக அன்று காலை 10.25 மணிக்கு நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கி மாலை லட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரர் பூஜை, துவஜாரோகனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூதவாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ந் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மறுநாள் 6-ந் தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

    ×