search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parent tears"

    5 வருடம் தவம் இருந்து பெற்ற எங்கள் குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்ததால் எங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டோம் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். #Denguefever

    மாதவரம்:

    கொளத்தூர் தணிகாசலம் நகர் பொன்னியம்மன் மேடு பகுதியில் குடியிருப்பவர் சந்தோஷ்குமார். இவருடைய மனைவி கெஜலட்சுமி.

    இவர்களுடைய மகன் தக்‌ஷன்(6), மகள் தீக்ஷா(6). இரட்டை குழந்தைகளான இவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    தங்கள் இரண்டு குழந்தைகளும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால், பெற்றோர் கதறிதுடித்தனர். உறவினர்களும், பக்கத்து வீட்டுகாரர்களும் சோகத்தில் மூழ்கினார்கள்.

    நான் அமுதம் அங்காடியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறேன். 5 வருடங்களாக எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக எனது மனைவி கெஜலட்சுமி சிகிச்சை பெற்றார். அதன்பிறகு இரட்டை குழந்தைகளாக தக்‌ஷன், தீக்ஷா பிறந்தார்கள்.

    இருவருக்கும் 6 வயது ஆகிறது. அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு 2 பேருக்கும் காய்ச்சல் வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். ஒரு வாரம் ஆனபிறகும் காய்ச்சல் குறையவில்லை. பரிசோதனை செய்து பார்த்தபோது வைரஸ் காய்ச்சல் என்றார்கள்.

    எனவே, எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது. 2 பேரும் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகள் தீக்ஷா நேற்று இரவும், மகன் தக்‌ஷன் இன்று காலையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 5 வருடம் தவம் இருந்து பெற்ற எங்கள் குழந்தை இறந்ததால் எங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டோம்.

    இவ்வாறு கூறிய அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

    குழந்தைகள் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் சந்தோஷ்குமார் மனைவி கெஜலட்சுமி மயங்கி விழுந்தார். உறவினர்களும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் 2 குழந்தைகளை இழந்த இந்த தம்பதியினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குவிந்தனர். அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. #Denguefever

    ×