search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party member"

    தருமபுரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மாது (வயது 55). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் தனியார் கல் குவாரியில் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியில் உள்ள அரசு கல் குவாரி அருகே வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டின் சமையல் அறை, சிமெண்டு அட்டைகளால் வேயப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு 8 மணிக்கு மாது வீட்டில் இருந்தார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் சிமெண்டு அட்டைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. வெடிகுண்டு துகள் பட்டு காயமடைந்த மாது பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து மாது கூறியதாவது:-

    என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக எனது வீட்டில் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். வெடி பட்டதில் சிமெண்டு அட்டைகள் சிதறி என்மேல் பட்டு எனக்கும் காயம் ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று வெடித்த வெடி மருந்து எந்த வகையை சேர்ந்தது என்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். உண்மையிலேயே வெடித்தது வெடிகுண்டா? அல்லது பாறைகளில் வெடி வைத்து தகர்க்க பயன்படும் வெடி மருந்தா? என்றும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    மாதுவும், கல் குவாரியில் வேலை பார்ப்பதால் அவர் தனது வீட்டில் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து அது வெடித்ததா? என்ற கோணத்திலும் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கைக்கு பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
    ×