search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patta knife"

    கரூர் அருகே பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர்கள் ஒன்று கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பசுதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, சிலர் பொது இடத்தில் மேஜை போட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), நல்லப்ப நகரை சேர்ந்த அசோக் ஆனந்த் (31), தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நீளமான பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக மணிகண்டன், அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சணப்பிரட்டியை சேர்ந்த அசோக் மற்றும் முழியன் என்ற சதானந்தம், தொழிற்பேட்டை நல்லப்ப நகரை சேர்ந்த பாலன், பசுபதிபாளையம் பாரதி நகரை சேர்ந்த பழம் ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை மணிகண்டனின் நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    அந்த வீடியோவில், பொது இடத்தில் மேஜை போட்டு கேக்கில் மெழுகுவர்த்தி தயாராக இருக்கிறது. அதனை ஊதி அணைக்கின்றனர். பின்னர் வெட்டுடா மச்சான்... என நண்பர்கள் குரல் எழுப்ப, அந்த கேக் பட்டாக்கத்தியால் வெட்டப்படுகிறது. பின்னர் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    கரூரில் பட்டாக்கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது பசுபதிபாளையத்தில் 3 வழக்குகளும், கரூர் டவுன் போலீசில் ஒரு வழக்கும் உள்ளன. கார்த்திக் மீது மதுபாட்டில் விற்றதாக ஒரு வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 
    ×