என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pattamangalam guru bhagavan
நீங்கள் தேடியது "pattamangalam guru bhagavan"
பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும்.
சனகாதி முனிவர்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளிய குரு பகவான் எங்கிருக்கிறார் தெரியுமா?
பெண்கள் ருதுவாவதில் ஏற்படும் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும் அற்புத தலம் எது தெரியுமா?
கார்த்திகை பெண்களின் சாபம் தீர்த்த தலம் எது தெரியுமா?
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். வாருங்கள்.. பட்டமங்கலம் குரு பகவானை தரிசிக்க செல்வோம்.
அது கயிலாயம்!
குரு தட்சிணாமூர்த்தியாக, சனகாதி முனிவர்களுக்கு அஷ்டமா சித்திகளை போதித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். இதைக்கண்ட ஆறு பெண்கள், தாங்களும் சிவபெருமானிடம் இருந்து அஷ்டமா சித்திகள் குறித்து உபதேசம் பெற விரும்பினர்.
அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்த்யேந்தி ஆகிய அந்த ஆறு பெண்களும் வேறு யாருமில்லை. சரவணப் பொய்கையில், முருகப்பெருமானுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்த அதே கார்த்திகைப் பெண்கள் தான்!
அவர்கள் ஆறு பேரும் சிவபெருமானிடம் சென்று, அவரைப் பணிவுடன் வணங்கி நின்றனர். பின்னர் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை அருள வேண்டினர்.
அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் உமாதேவியிடம் பிரார்த்தியுங்கள். அவர் உங்களுக்கு அருள்புரிவாள்’ என்றார் பரமன்.
ஆனால், உமாதேவியிடம் அந்த உபதேசத்தைப் பெற, அந்த ஆறு பேரின் கர்வம் இடம் கொடுக்கவில்லை. ‘சிவபெருமானே நேரடி உபதேசம் நல்க வேண்டும்’ என்று உமையவளைத் தவிர்த்தனர். அதனால் அவர்கள் சாபத்துக்கு ஆளாயினர். அழகான ஒரு கதம்ப வனத்தில் ஆல மரத்தடியில் கல்லாகிப் போனார்கள்.
கல்லானால் என்ன... மனம் முழுவதும் சிவ சிந்தையுடன், அவர்கள் ஆறு பேரும் தவத்தில் ஈடுபட்டனர். ஆண்டுகள் ஆயிரங்களில் கடந்து விட்டன. குரு வடிவாக அந்த மரத்தடிக்கு வந்த சிவனார், ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமர்ந்தார். கற்கள் உயிர் பெற்றன. சுய உரு பெற்ற கார்த்திகைப் பெண்கள், சிவனாரை வணங்கினர்.
‘சுவாமி! சாப விமோசனம் அளித்த தாங்கள், அஷ்டமா சித்திகளையும் உபதேசித்து எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி அருள வேண்டும்!’ என்று வேண்டினர். அதன்படியே அந்த ஆல மரத்தடியில் கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார் சிவபெருமான்.
இதையடுத்து கார்த்திகை பெண்கள் ஆறு பேரும், உமையவளையும் வழிபட்டு மன்னிப்பு வேண்டினார்கள். அதுமட்டுமா? பரம்பொருளிடம் இன்னொரு விண்ணப்பத்தையும் வைத்தார்கள்.
‘சுவாமி! தாங்கள் இந்த இடத்திலேயே குடி கொண்டு, இங்கு வரும் பக்தர்களுக்கு வரம் தந்து அருள வேண்டும்’ என்றனர்.
அப்படியே அருள் செய்தார் பரமனார். அதனால், இன்றும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் பக்தர்களது வேண்டுதல்கள் குறைவின்றி நிறைவேறுகின்றன!
கதம்ப வன புராணம், திருவிளையாடல் புராணம் (64 திருவிளையாடல்களில் இது 33-வது திருவிளையாடல்) ஆகிய நூல்கள் விவரிக்கும் இந்தத் தலத்தின் பெயர் பட்டமங்கலம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவனும் இறைவியும் மீனாட்சி சுந்தரேஸ்வரராக கோவில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், குரு தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார், ஆதிசிவன். கிழக்குப் பார்த்த ஆலயம்; குரு தட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி இருப்பது, இந்த ஆலயத்தின் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.
கிழக்கு என்றாலே விடியல்தானே?! பட்டமங்கலம் குரு பகவானை வணங்கும் பக்தர்களது வாழ்விலும் வெளிச்சமும் முன்னேற்றமும் நிச்சயம்!
தீராத நோயும் தீரும்!
பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.
குருப் பெயர்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயர்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குரு பகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X