search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Investigation Committee Report"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்களை போலீசார் குறிபார்த்து சுட்டு கொன்றதாக மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. #Thoothukudifiring
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வெளியிடப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூ‌ஷன் அறிக்கையை வெளியிட வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பெற்றுக் கொண்டார்.

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * தூத்துக்குடியில் மே 22-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் பங்கேற்பது பற்றி மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கடமையை புறக்கணித்துள்ளது.

    * கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    * மாவட்ட நிர்வாகம் தன் கடமையை புறக்கணித்து திட்டமிட்டு ஓடி ஒளிந்து கொண்டதால்தான் வன்முறையும் இறப்புகளும் பெரிய அளவில் நடந்து விட்டது.

    * பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவதற்கு பதிலாக அராஜகத்தில் ஈடுபட்டது. கூட்டத்தை கலைக்க முறையான சட்ட விதிகளை கடைபிடிக்கவில்லை.

    * ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபடாதபோது பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி மக்களை காயப்படுத்தி அச்சுறுத்தி உள்ளனர்.

    * சீருடையில் இல்லாத சாதாரண உடை அணிந்த காவலர்கள் போலீஸ் வாகனங்களில் மேல் ஏறி கூட்டத்தினரை குறி வைத்து சுடுவதும், மக்களை கொல்வதும் போலீசாரின் அத்துமீறலாகும்.

    * பெண்கள், குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து முழு விசாரணை தொடங்க வேண்டும்.



    * ஊர்வலம் நடந்த பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள திரேஸ்புரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஜான்சியின் கொலை நடந்துள்ளது. இது போலீசாரின் செயல் என்று பரவலாக நம்பப்படுகிறது.

    * துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் மக்களை வீடு தேடி கைது செய்வதும் சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைப்பதும் தொடர் சம்பவமாகி விட்டது. இதை அனுமதிக்க முடியாது.

    தூத்துக்குடியில் இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லாத நிலையில் அளவுக்கு அதிகமாக போலீசார் அங்கு இருப்பது தேவை இல்லாத ஒன்று.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திலக், செல்வராஜ், ஷிவ் விசுவநாதன், கிறிஸ்து தாஸ் காந்தி, கீதா, கவிதா, ஜோசையா, தீபக்நாதன், டாம்தாமஸ் உள்பட பலர் பங்கேற்றனர். #Thoothukudifiring
    ×