search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples praise"

    அவினாசி அருகே ரோட்டில் கிடந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் பாராட்டினார்கள்.
    அவினாசி:

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனியப்பன் (33), முருகேசன் (23). இவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் 2 பேரும் தினசரி வசூல் பணிக்காக மோட்டார் சைக்கிளில் அவினாசியில் இருந்து கருவலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரோட்டில் ஒரு பை கிடந்தது.

    அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்தை எடுத்த அவர்கள் அவினாசி போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் பணத்தை தவற விட்ட கருவலூரை சேர்ந்த தோல் வியாபாரி ரங்கராஜன் (55) என்பவர் உரிய அடையாளம் கூறி டி.எஸ்.பி. பரமசாமி முன்னிலையில் பணத்தை பெற்று கொண்டார்.

    அவர் போலீசாரிடம் கூறும் போது, வியாபாரம் தொடர்பாக துரைசாமி என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி வந்தேன். அந்த பணத்தை பனியனுக்குள் போட்டு கொண்டு கோவில்பாளையம் ரோட்டில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அப்போது பணம் தவறி விழுந்துள்ளது.

    வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் தான் அவினாசி போலீசில் பணம் ஒப்படைக்கப்பட்ட தகவல் கிடைத்து இங்கு வந்து பணத்தை பெற்று கொண்டேன் என்றார்.

    ரோட்டில் கிடந்த பணத்தை நேர்மையுடன் எடுத்து போலீசில் ஒப்படைத்த பழனியப்பன், முருகேசன் ஆகியோரை போலீசார் பாராட்டினர். அவர்களுக்கு போலீஸ் சார்பில் பாராட்டு சான்று வழங்க ஏற்பாடு செய்யப்படும் என டி.எஸ்.பி கூறினார்.

    பணத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த முருகேசன் கூறியதாவது-

    குடும்ப சூழல் காரணமாக நீண்ட தூரத்தில் இருந்து அவினாசியில் தங்கி வேலை பார்க்கிறோம். வழக்கமாக செல்லும் வழியில் துணிப்பை ரோட்டில் கிடந்தது.

    இதனை எடுத்து பார்த்ததில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அருகில் விசாரித்தோம். யாரும் இந்த பணத்திற்கு உரிமை கொண்டாடவில்லை. அதன் பின்னர் அவினாசி போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பணத்தை போலீசில் ஒப்படைத்த பழனியப்பன், முருகேசன் ஆகியோருக்கு அவினாசி மற்றும் கருவலூரை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
    ×