search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "periyanayagi amman"

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ×