search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "periyanayagi madha"

    கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    விருத்தாசலம் அருகே கோணான்குப்பத்தில் புகழ் பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆலய பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பங்கு தந்தைகள் தலைமையில் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம் ஜமீன், அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.

    அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரியநாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. அந்த தேர்களை இழுத்து பாலதண்டாயுதம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தேர் பவனி நடந்தது.

    பின்னர் 3 ஆடம்பர தேர்களும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆடி, அசைந்தபடி ஆலயத்தை வலம் வந்தது. அந்த சமயத்தில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ பாடல்களை பாடினர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தேர்பவனியையொட்டி ஆலயத்துக்கு கிறிஸ்தவர்கள் வந்து செல்லும் வகையில் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் இருந்து கோணான்குப்பத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியநாயகி அன்னை ஆலய பங்குதந்தை அருள்தாஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
    கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலம் அருகே உள்ள கோணான்குப்பத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஆடம்பர தேர்பவனி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து அன்று மாலை கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பெருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித மாதா கெபி முன்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை திருப்பலி, சிலுவை பாதை, தேர்பவனி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற இருக்கிறது.

    விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இங்கு வரும் மக்களுக்காக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை அருள்தாஸ் செய்து வருகிறார். 
    ×