search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar policy"

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டாத அதிசய கிராமங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. #SelfRespectMarriage
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டைபூண்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு செக்கடி குப்பம், கோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 50 வருடத்துக்கு முன்பு இந்த கிராமங்களில் திருமணத்தின்போது பெண்களுக்கு தாலி கட்டும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்நிலையில் மேல்மலையனூருக்கு பெரியார் வந்து பேசினார். அப்போது அவர் பெண்களை அடிமைகளாக நடத்தக்கூடாது. திருமணத்தின்போது பெண்களுக்கு தாலி அணிவிப்பது அவர்களை அடிமைப்படுத்தும் செயலாகும். எனவே திருமணத்தின்போது தாலி கட்டக்கூடாது என்று கூறினார்.

    இது அந்த கிராமமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த கிராமங்களில் 50 வருடங்களாக சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இல்லை. சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. மணப்பெண்ணுக்கு தாலி அணிவிப்பது இல்லை. திருமண ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கின்றனர்.


    அந்தபகுதியில் 1968-ம் ஆண்டு அர்ச்சுணன் என்பவருக்கும், தனியரசு என்ற பெண்ணுக்கும் முதன் முதலாக சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து சுயமரியாதை திருமணம் நடைபெற்று வருகிறது.

    அர்ச்சுணன், தனியரசு தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தைக்கு பெரியார் என்று பெயர் சூட்டினார்கள். அவர் தற்போது அந்த பகுதியில் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். பெரியாரின் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

    அந்த பகுதியில் அதிகளவில் சாராயம் விற்கப்பட்டது. இதனால் பல குடும்பங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து அந்த பகுதியில் சாராயத்தை ஒழித்துள்ளார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகிறார்கள். விடுதலை விரும்பி, மதியழகன், தமிழ்ச்செல்வன் என்பன உள்பட பல்வேறு பெயர்களை சூட்டுகின்றனர்.

    பெரியாரின் கொள்கையை பின்பற்றி சுய மரியாதை திருமணம் நடத்தி வரும் இந்த கிராம மக்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளனர். #SelfRespectMarriage
    ×