search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition To High Court"

    தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

    அதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் அந்த வழக்கை விசாரித்து 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டனர்.

    சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியும் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை வெளியிட்டனர். இதனால் 18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கம் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு விடப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக இருந்து இந்த வழக்கை விசாரிப்பார் என்று தகவல் வெளியானது. இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்ஏ. தவிர மற்ற 17 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தனர்.

    அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரித்து கடந்த 27-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் எப்போது விசாரணையை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையை பொருத்தவரை எந்த காலக்கெடுவும் இல்லை. எனவே கடந்த 6 நாட்களாக இந்த வழக்கு விசாரணை எப்போது தொடங்கும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் உடனே தனது விசாரணையை தொடங்க வேண்டும் என்று கோரி 17 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். அவர்கள் சார்பில் இது தொடர்பாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சக்திவேலை சந்தித்து மனு கொடுத்தார்.

    அவர் அந்த மனுவில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 18 தொகுதிகளும் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி உடனே விசாரிக்கும் வகையில் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க 3-வது நீதிபதி சத்திய நாராயணனை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. ஆனால் இன்னும் அவர் விசாரணை தொடங்கவில்லை.

    இதனால் உயர்நீதிமன்ற பதிவாளரை நேற்று காலையில் சந்தித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளேன்.

    நீதிபதி சத்திய நாராயணன் வேறு ஒரு பெஞ்சில் பணியில் உள்ளதால், எங்களது வழக்கை சுட்டிக்காட்டி எங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    ஏனென்றால் 18 தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற முடியாத சூழல் உள்ளதால் மக்கள் நலன் கருதி கால தாமதம் ஏற்படாமல் விரைந்து விசாரிக்க அதில் வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
    ×