search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Piety Cyclone"

    புதுவை மாநிலம் ஏனாமில் ‘பெய்ட்டி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். #PietyCyclone
    புதுச்சேரி:

    ‘பெய்ட்டி’ புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மதியம் கரையை கடந்தது.

    ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. புயல் கரையை கடந்தபோது, 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.



    இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கல்வித்துறையின் மதிய உணவுக்கூடம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய்த்துறை செயலாளர் தேபேஷ்சிங், கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்திரி ஆகியோர் முடுக்கி விட்டுள்ளனர். மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்ட நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

    பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 6 மணி நேரத்தில் இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது.

    வீடுகள் மீது மரங்கள் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் இல்லை. தேவையான நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். #PietyCyclone



    ×