search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillayaar"

    • இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.
    • இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்க முடியும்.

    "ஓம் ஏகதந்தாய வித்மஹே

    வக்ர துண்டாய தீமஹி

    தன்னோ தந்தி ப்ரசோதயாத்"

    இந்த மந்திரத்தை செபித்து வர காரியத் தடைகள் நீங்கும்.

    எல்லா வளமும் நலமும் அமையும்.

    குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை செபித்து கணபதியை வேண்டி செல்ல காரிய சித்தி கிட்டும்.

    கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை செபித்து கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

    இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமை ஜெபிக்கத் தொடங்கலாம்.

    எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

    இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.

    இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.

    இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இது அனுபவ உண்மை.

    ஒம் கம் கணபதியே நமஹ

    இது கணபதியின் மூல மந்திரம்.

    இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.

    இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.

    இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.

    இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!

    • அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.
    • மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள்.

    நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம்.

    அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது,

    முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம்.

    பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ' ஓம் ' என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம்.

    அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

    எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான்.

    மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை.

    மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார்.

    பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது.

    நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.

    விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது.

    இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும்.

    புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

    இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.

    மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள்.

    நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.

    இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம்.

    ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

    • அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள்.
    • இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் பெயரில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் கணபதி அக்ரஹாரம்.

    இந்த கிராம மக்கள் பிள்ளையார் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையாரை தனியாக வைத்து பூஜை செய்வது இல்லை.

    தண்ணீரில் விடுவதும் இல்லை. இந்தப்பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    எல்லா நிவேதனப் பொருட்களையும் பிள்ளையார் கோவிலுக்கு, எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள்.

    'கணேசாத் அன்யத் நகிங்கன்' என்று சொல்வார்கள்.

    அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள்.

    விநாயகர் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் கோவிலுக்கே சென்று முழு முதல்வனுக்கு முதல் மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்கு விநாயகப்பெருமானின் லீலையே காரணம்.

    தஞ்சை அரண்மனையில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரியாக இருந்தார்.

    அவர் இங்கிருந்த போது விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையார் வைத்து பூஜை செய்ய முடிவு செய்து

    நிவேதனப்பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வீட்டிற்குள் சென்றார்.

    திரும்பி வந்த பார்த்த போது தாம்பாளம் முழுவதும் தேள்கள் இருந்தன.

    அவர் பயந்து போய் அக்கம் பக்கத்தில் சொல்ல அவர்கள் இவ்வூர் வழக்கத்தை சொல்லி விளக்கினர்.

    பின்னர் அவர் எல்லாப்பொருட்களையும் கோவிலுக்கு எடுத்து சென்று ஒப்படைத்தார்.

    இன்னொருவர் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தொடங்கினார்.

    அப்போது திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்டு இருந்த யானை அவர் வீட்டுக்கு அருகில் வந்ததும், வேகமாக பிளறியது.

    பின்னர் வாசல் கதவு, கீற்று இவைகளை பிரித்து எறிந்தது.

    பின் சாய்ந்த நிலைக்கு வந்து அங்கிருந்து சென்று விட்டது.

    அரண்டு போன அந்த நபர் கோவிலுக்கு வந்து கணபதியை வழிபட்டார்.

    ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழாவை அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து

    எப்படி ஆனந்தமடைந்தார்களோ அதைப்போல கணபதி அக்ரஹார கிராம மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை

    தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து பரவசம் அடைகின்றனர்.

    இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும்.
    • அரிசியின் மேல் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி ‘உ’ போட வேண்டும்.

    ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்.

    விநாயகர் சதுர்த்தி அன்று சதுர்த்தி திதி நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று முறைப்படி

    விநாயகரை தரிசித்து விட்டு பிறகு தான் பூஜைக்குரிய களிமண் பிள்ளையாரை வாங்க வேண்டும்.

    வீட்டின் பூஜை அறையில் மரப்பலகையில் ஆசனம் போட்டு, அதில் பச்சரிசி மாக்கோலம் போட வேண்டும்.

    ஒரு தலை வாழை இலையை அதன் நுனிப்பகுதி கிழக்கு திசையை பார்த்து இருக்குமாறு

    அப்பலகையில் மேல் போடப்பட்டுள்ள கோலத்தின் மீது வைக்க வேண்டும்.

    அந்த இலையில் மூன்று கைப்பிடி அளவு நல்ல பச்சரிசியை பரப்ப வேண்டும்.

    அரிசியின் மேல் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி 'உ' போட வேண்டும்.

    அதன்கீழ் ஓம் என்று அதே விரலால் எழுத வேண்டும்.

    வாங்கி வந்த மண் பிள்ளையாரை அந்த அரிசியின் மேல் அமர்த்தி வைக்க வேண்டும்.

    அதனை அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும்.

    தொப்புளில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

    விநாயகர் அகவல், விநாயகர் மூல மந்திரம் மற்றும் விநாயகர் தொடர்பான மந்திரங்களை கூறி தூபமிட்டு, சூடமேற்றி விநாயகரை வழிபட வேண்டும்.

    பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும்.

    அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும்.

    விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிறகு களிமண் விநாயகரை குளம், கிணறு, ஆறு, சமுத்திரம் ஆகிய ஏதாவது ஒன்றில் தண்ணீரில் விட வேண்டும்.

    உடைக்கவோ அல்லது கரைக்கவோ கூடாது. அப்படியே தண்ணீரில் இறக்கி விட வேண்டும்.

    இதற்கு விசர்ஜனம் என்று பெயர்.

    ஆண்கள் தான் இதை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜைநாளையும் சேர்த்து 1,3,5,7 என்று ஒற்றைப்படை நாளில் தான் இப்படி இறக்கி விட வேண்டும்.

    அந்த நாளும் ஞாயிற்றுக் கிழமை அல்லது திங்கட்கிழமையாக மட்டுமே இருக்க வேண்டும்.

    • கணபதிக்குப் படைக்கப்படும் ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.
    • விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை.

    கணபதிக்கு பிரியமான 21

    கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற

    ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.

    அதிலென்ன சிறப்பு? ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்- 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21.

    விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை.

    இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

    மலர்கள் 21

    புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை,

    கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

    அபிஷேகப் பொருட்கள் 21

    தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி,

    பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன்,

    கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

    இலைகள் 21

    மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி,

    மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை,

    நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

    நிவேதனப் பொருட்கள் 21

    மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு,

    பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்

    • அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
    • குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும்.

    பூஜை அறையில் மனைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியை பரப்ப வேண்டும்.

    அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.

    மனையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள்,

    அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு,

    தொப்பையில் காசு வைக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மனைப்பலகையில் இருத்த வேண்டும்.

    குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

    கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் என நம்மால் முடிந்ததைக் கொண்டு பூஜை செய்யலாம்.

    தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்து பின்னர்,

    ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே

    வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

    எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும்.

    பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம்.

    வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம்.

    காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு.

    விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும்.

    விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது 3, 5, 7- ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம்.

    ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும்.

    விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

    • மஞ்சள், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் நீரில் கரைத்துவிட வேண்டும்.
    • மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

    கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால்

    விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம்.

    மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின்

    தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும்.

    மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

    • அமிர்தம் வெளிப்பட்டபோது அமிர்தகலசத்தை எடுத்து பிள்ளையார் மறைத்து வைத்து விட்டார்.
    • இங்கு பிள்ளையார் மறைத்து வைத்த அமிர்தகலசம் நாளடைவில் லிங்க வடிவாக மாறிவிட்டது.

    நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையாரின் பெயர் கள்ளவாரணப் பிள்ளையார் என்பதாகும்.

    தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலை கடைவதற்கு முன் இந்த பிள்ளையாரை வழிபட மறந்து விட்டனர்.

    பின்னர் அமிர்தம் வெளிப்பட்டபோது அமிர்தகலசத்தை எடுத்து பிள்ளையார் மறைத்து வைத்து விட்டார்.

    இதனால் அவர் கள்ளவாரணப் பிள்ளையார் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    பொதுவாக சிவன் கோவில்களில் முன்புறம் பிள்ளையார் சன்னதி இருக்கும்.

    ஆனால் திருக்கடையூரில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒளிந்து கொண்டு இருப்பதால் அவரை தேடி கண்டுபிடித்து தரிசனம் செய்ய வேண்டும்.

    பின்னர் தேவர்கள் கள்ளவாரணப் பிள்ளையாரை வழிபட்டு அமிர்தகலசத்தை திரும்பப்பெற்றனர்.

    இங்கு பிள்ளையார் மறைத்து வைத்த அமிர்தகலசம் நாளடைவில் லிங்க வடிவாக மாறிவிட்டது.

    இதையே பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

    • அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், என்று சொல்வது வழக்கம்.
    • ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை.

    தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து

    தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம்.

    ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை.

    விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம்.

    சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    • பார்வதிதேவி, தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து விநாயகரை தோற்றுவித்தார்.
    • அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    பார்வதிதேவி தான் நீராட செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.

    அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன்.

    அதை கண்ட தேவி வெகுண்டாள்.

    நிலையை உணர்ந்த சிவன் யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.

    நீயே யாவருக்கும் தலைவன் என்றார்.

    ஸர்வ விக்னஹரம் தேவம்

    ஸர்வ விக்ன விவர்ஜிதம்

    ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்

    வந்தே அஹம் கணநாயகம்.

    என்று போற்றுகிறது.

    அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    • மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.
    • கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கியபின்,

    நம் வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும்.

    அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும்.

    பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால்,

    தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும்.

    அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பையில் காசு வைக்கவேண்டும்.

    பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும்.

    பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக

    பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும்.

    பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.

    இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும்.

    நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார் முன் வைக்க வேண்டும்.

    கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும்.

    பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம்.

    வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர்,

    கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.

    எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

    முதலில்,

    "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்

    யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'

    என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

    அதன்பின்,

    "ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத

    சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா'

    என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம்.

    குழந்தைகளையும் சொல்ல செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும்.

    அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.

    அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

    ×