search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic Manufacturers demonstrated"

    பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி சென்னையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா பொருளாளர் கோவை தங்கம், வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், ராம்குமார், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஆர்.எஸ்.முத்து, விருகை முத்து, தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் பேசியதாவது:-

    தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

    பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை தொழிலை ஒழுங்கு படுத்தி பிளாஸ்டிக் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் பல லட்சம் பிளாஸ்டிக் தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்வி குறியாகும் நிலையை தடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தடை உத்தரவை விலக்கிகொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிளாஸ்டிக் தடையை கண்டித்து சேப்பாக்கத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழக சட்டசபையில் 5.6.2018 அன்று 110-வது விதியின் கீழ் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் 1.1.2019 முதல் தமிழகத்தில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    சுற்றுச்சூழலை காப்பாற்ற இந்த தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்படுகிறது.

    ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு முதலாளிகளும் தயாரிக்கும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதுவும் தடை கிடையாது என்ற வி‌ஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்தது.

    தமிழக அரசின் இந்த தடையால் பதிவு பெற்ற சிறு, குறு நிறுவனங்கள் 10 ஆயிரமும், பதிவு பெறாத சிறு, குறு நிறுவனங்கள் 15 ஆயிரமும் பாதிக்கப்படும். இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்.

    பிளாஸ்டிக் தடைஇல்லாத ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் இதர மாநிலங்களுக்கு தமிழக பிளாஸ்டிக் சந்தை முழுவதுமாக திறந்து விடப்படும்.

    தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் மற்றும் தமிழ்நாடு, மின்சார வாரியத்துக்கும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

    மேலும் இந்த தடையால் எங்கள் தொழில் எவ்வாறு பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

    வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தெழில் சங்க தலைவர் அன்புராஜனும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

    நாளை தமிழகம் மற்றும் பாண்டியில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் கதவு அடைப்பு செய்து விட்டு பிளாஸ்டிக் தொழிலை நடத்தி வரும் சிறு, குறு தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மத்திய அரசு பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமாக ஒரு இறுதி கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் வரை தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முதல்-அமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×