search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Platinum with Diamonds"

    • பிளாட்டினம் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாகும்.
    • பிளாட்டினம் வைர கற்களுடன் கூடுதல் அழகு சேர்க்கும்.

    'வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பிளாட்டினம் அதிக அடர்த்தி உலோகமாகும். வெள்ளியைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாட்டினம், வெள்ளியைவிட அதிக பளபளப்பு உடையது. மருத்துவத் துறையிலும், மின்னியல் துறையிலும் பிளாட்டினத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மென்மையான உலோகமான பிளாட்டினத்தைக் கொண்டு எளிதாக எந்த வடிவத்தையும் உருவாக்க முடியும்.

    பிளாட்டினம் ஆக்சிடைசிங் (ஆக்சிஜனேற்றம்) செயல்முறைக்கு உட்படாதது. எனவே இது கருக்காது. அமிலங்களால் பிளாட்டினத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.

    பிளாட்டினம் தற்போது நகைகள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வைரங்கள், ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை பிளாட்டினத்தைக் கொண்டே வடிவமைக்கிறார்கள். பிளாட்டினத்தின் பளபளப்பு தன்மை வைரக் கற்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    பிளாட்டின நகைகளை திருமண நிச்சயதார்த்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும், பரிசாக அளிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

    பிளாட்டினம் நகைகளை வாங்குவதற்கு முன்பு அதில் ஹால்மார்க் முத்திரைகள் இருப்பதை கவனிக்க வேண்டும். நகையின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே பிளாட்டினம் நகைகளை வாங்க வேண்டும். வாரண்ட்டி, ரிட்டர்ன் பாலிசி போன்ற சேவைகளைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

    பழைய பிளாட்டினம் நகைகளை உருக்கி புதிய நகைகளாக உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் மாற்றிக்கொள்ள முடியும். நகையை உருக்கும்போது அதன் அளவில் சிறு இழப்புகள் ஏற்படக்கூடும். பிளாட்டினத்தை உருக்கி சுத்தம் செய்து புதிதாக வடிவமைக்க, பயிற்சி பெற்ற கலைஞர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

    நிதி நெருக்கடி ஏற்படும் நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைப் போலவே பிளாட்டினம் நகைகளையும் அடகு வைத்து தேவையான பணத்தைப் பெற முடியும். நகையின் தூய்மை, எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிளாட்டினம் நகைகளை மதிப்பிடுவார்கள்.

    மற்ற உலோகங்களைக் காட்டிலும் பிளாட்டினம் அதிக மதிப்பு கொண்டது, அரிதானது. எனவே அதில் மற்ற உலோகங்களின் கலப்பு குறைவாகவே இருக்கும். அரிதாக தங்கத்துடன் சிறப்புக் கலவையாக பிளாட்டினம் கலக்கப்படுகிறது.

     வெள்ளியுடன் ஒப்பிடும்போது பிளாட்டினம் அதிக காலம் நீடிக்கும். விரைவாக அழுக்கு அடையாது. பிளாட்டினத்தை மற்ற பொருட்களால் அரிக்க முடியாது. பிளாட்டினத்தில் தேய்மானம் குறைவாகவே இருக்கும். எனவே விலை உயர்ந்த வைரக்கற்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பிளாட்டினத்தை உபயோகிக்கிறார்கள்.

    பிளாட்டினத்தின் இயற்கையான வெள்ளை நிறம் வைரங்களின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவை வைரத்தின் பளபளப்பையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும்.

    பிளாட்டினம் நகைகளை அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றலையும். அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பிளாட்டினத்தின் நீடித்து இருக்கும் தன்மையும், வலிமையும் அதற்கு அதிக வரவேற்பை பெற்றுத் தருகின்றன. வைரங்கள் பதித்த பிளாட்டினம் நகைகள் இளைஞர்களின் விருப்பமாக இருக்கின்றன.

    ×