search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi campaign"

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #PMModi #BJP #LokSabhaElections2019

    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் வருகிற 18-ந்தேதி 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்தேதி 4 சட்ட சபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதால் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். முதலில் அவர் மதுரையில் பிரசாரம் செய்தார்.

    2-வது கட்ட பிரசாரத்தை ஈரோட்டிலும், 3-வது கட்ட பிரசாரத்தை கன்னியாகுமரியிலும், 4-வது கட்ட பிரசாரத்தை சென்னையிலும் பிரதமர் மோடி மேற்கொண்டார். சமீபத்தில் 5-வது கட்டமாக கோவைக்கு வந்து அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதற்கிடையே பிரதமர் மோடி ஒரு தடவை தமிழகத்துக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க.- பா.ஜனதா தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டார்.

    நேற்று மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி நேற்று இரவு கோழிக்கோடு நகரில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தார். மதுரை பசுமலையில் உள்ள விடுதியில் அவர் தங்கினார்.

    இன்று காலை 9.55 மணிக்கு பிரதமர் மோடி, ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டார். 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி புறப்பட்டார். 10.50 மணிக்கு மோடியின் ஹெலிகாப்டர் தேனி சென்று அடைந்தது. அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கானாவிலக்கு பகுதிக்கு சென்றார்.

    அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் அவர் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பேசினார்.

     



    அதோடு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களையும் அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான லோகி ராஜன் (ஆண்டிப்பட்டி), மயில்வேல் (பெரியகுளம்) ஆகியோரையும் ஆதரித்து பேசினார்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த மக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக 2 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 15 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் பலர் தேனியில் குவிந்து இருந்தனர். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

    தேனி கூட்டத்தை முடித்ததும் பகல் 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமநாதபுரம் புறப்பட்டார். 12.50 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் ராமநாதபுரம் வந்தடைந்தது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மோடி, அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் டி.பிளாக் அம்மா பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    மதியம் 1 மணிக்கு அவர் பேச்சை தொடங்கினார். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந்திரராஜன் (தூத்துக்குடி), டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

    கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே தொண்டர்கள் திரண்டதால், பொதுக்கூட்ட திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தது.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோர பகுதியில் 24 மணி நேரமும் கடற்படை, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு செய்தனர். அனைத்து தரப்பினரும் கடும் சோதனைகளுக்கு பிறகே பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கடும் வெயிலில் மக்கள் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்காக ராட்சத பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதுபோல பொதுமக்கள் சிரமம் இல்லாமல் நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    மதியம் 1.45 மணிக்கு பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, காரில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு சென்றார். 1.55 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    2.40 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்து சேருகிறார். அங்கிருந்து 2.45 மணிக்கு புறப்படுகிறார். தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மங்களூர் செல்கிறார். #PMModi #BJP #LokSabhaElections2019

    ×