search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO Website"

    • நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்சோவுக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் https://www.pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளம், தனி நபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலி போன்ற புதிய செயலிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை போலீஸ் துறை, போக்சோ கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள், விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வரையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் அத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுபடுத்த முடியும்.

    மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி இணையதளம் மூலமாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தவும், துறை சார்ந்த உயர் அலுவலர்களால் வழக்கு துரிதமாக தீர்வு செய்வதை கண்காணிப்பதற்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக அமையும். குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×