search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police shirt camera"

    போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்தது. #ChennaiTrafficPolice
    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது சிலர் தகராறில் ஈடுபடுகிறார்கள்.

    இதேபோல் போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றன.

    வாகன ஓட்டிகள்- போலீசார் இடையே தகராறு சம்பவம் மற்றும் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்தது.

    இந்த திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக 200 கேமராக்கள் வாங்கப்படுகின்றன.

    இந்த கேமராக்கள் தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. 120 டிகிரி கோணத்தில் காட்சிகளை பதிவு செய்ய முடியும்.


    கேமராக்கள் முதலில் இணைய தள வசதியின்றி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் மினிசர்வர் உருவாக்கப்படுகிறது. இதன் பிரதான சர்வர் வேப்பேரியில் உள்ள போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும்.

    கேமராவில் பதிவாகும் காட்சிகள் மினி சர்வர்கள் மூலம் பிரதான சர்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு கேமராவில் இருந்தே இணைய தளம் மூலம் பிரதான சர்வருக்கு காட்சிகளை அனுப்பப்படும். இந்த காட்சிகளை அதிகாரிகள் நேரிடையாகவே பார்க்க முடியும்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “வாகன சோதனையின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீசார் மீது லஞ்சப்புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தகராறு செய்பவர்களை கண்டறியவும் கேமரா பொருத்தப்படுகிறது.

    கேமராவை போலீசார் தன்னிசையாக ஆப்செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்குவதற்காக கேமராவை ஆப் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்படும்” என்றனர். #ChennaiTrafficPolice
    ×