search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Leaders Wishes"

    நாளை ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியராக பணியை தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்துடன், இந்நன்னாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

    ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    ஏழைக்குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

    இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை கவுரவிக்கும் மத்திய-மாநில அரசுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சிறக்கவும், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நேர்மையான வழிமுறைகளை கையாளவும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு த.மா.கா. சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உன்னத மனிதர்களாக, சிறந்த படைப்பாளிகளாக திகழ்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு த.மா.கா. சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay


    ×