search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Politics criticism"

    அரசியல், பொருளாதார விமர்சனங்கள் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் காலம் வரவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கவிதா பதிப்பகம் மூலம் ப.சிதம்பரம் எம்.பி. எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகத்தையும், அதை தமிழாக்கம் செய்து எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் மொழிபெயர்த்த ‘வாய்மையே வெல்லும்’ என்ற புத்தகத்தையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வித்யோத்யா பள்ளி அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

    நூல்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:-


    நான் ஆங்கிலத்தில் எழுதியது பஞ்சாபி, உருது, இந்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அன்றே மொழிபெயர்க்கப்பட்டு அந்த வாரமே வெளிவருகிறது. ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுகிறோம். ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழிபெயர்ப்பு செய்யாமல், தமிழிலேயே இக்கட்டுரையை எழுதிட முடியுமா? என்பது தான் அது.

    என்றாவது ஒரு நாள் தமிழிலே ஒரு கட்டுரை எழுத முயற்சிக்கிறேன். காலம் தான் அதற்கு விடை. கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம் என எல்லாமே இலக்கியம். ஆனால் தமிழில் எனக்கு தெரிந்தவரை விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஆய்வு கட்டுரைகளும் அப்படி அல்ல.

    ஆங்கிலத்தில் வால்டர் விட்மன் என்ற கவிஞர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற அரசியல் விமர்சகர். அவரது எழுத்து மற்றும் அரசியல் விமர்சனம் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை போல தமிழ் உள்பட பிறமொழிகளிலும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சனங்களும் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு காலம் வரவேண்டும். அப்போது தான் ஒரு பெருமை, நீடித்த புகழ் கிடைக்கும்.

    ராஜாஜி, இமாம் நசாலி, கே.ரங்கசாமி, ஜி.கே.ரெட்டி, குல்ஜீத் நாயர் போன்றவர்கள் மிக தரமான அரசியல் விமர்சகர்கள். அவர்களது எழுத்துகள் இலக்கியமாகவில்லை. அது நடக்கவேண்டும். நீங்கள் சும்மா இருக்கக்கூடாதா? ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? என்று நண்பர்கள் கூறுகிறார்கள். சும்மா என்ற வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை உண்டா? அது எந்த மொழியிலும் இல்லை.

    சும்மானா என்ன? சும்மா இருப்பது சுகம் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் சும்மா எப்படி இருக்கமுடியும்? நான் சும்மா இருக்கமுடியாது. என்றைக்கு யானையின் துதிக்கை சும்மா இருக்குமோ, அன்றைக்குத்தான் நானும் சும்மா இருப்பேன். நான் எழுதுவதற்கு காரணங்களை சொல்வதை விட, உதாரணங்களை தான் அதிகம் சொல்கிறேன். எழுதுவதற்கான காரணங்களை அந்த உதாரணங்களில் இருந்து புரிந்துகொள்ளுங்கள்.

    அரசு துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.

    ஒரு குழந்தையின் முதல் 5 ஆண்டுகளில் கொடுக்கப்படும் கவனிப்பே அவர்களது வாழ்க்கைக்கான உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம். இந்தியாவில் 2-ல் ஒரு குழந்தை ரத்தசோகையுடனும், 3-ல் ஒரு குழந்தை எடை குறைவுடனும், 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்கிறது. ஒரு குழந்தை இந்தியாவில் முழு மனிதனாக வரவே முடியாது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1.20 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 25 லட்சம் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் அரை மனிதனாக, குறை மனிதனாக வாழ்கிறார்கள். இது தான் சோகமான நிலைமை.

    சாதி. சாதி, இந்து அமைப்பை நிர்வகித்து ஒழுங்குபடுத்துகிறது என்று இந்த 21-ம் நூற்றாண்டில் ஒரு முதல்-அமைச்சர் கூறுகிறார். இந்த கொடுமை ஒழியவேண்டும் என்றால் அனைவரும் எழுதவேண்டும், அனைவரும் பேசவேண்டும். என்ன எழுதவேண்டும் என்று நினைக்கவேண்டாம். உங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள். நண்பருக்கு ஒரு லெட்டர் எழுதுங்கள். என்ன நடக்கிறது? என்பதை பகிருங்கள். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம், ஊமைத்துறையாக அடங்கி இருக்கும் சமுதாயத்தில் எழுத்தும், பேச்சும் ஊன்றுகோலாக வேண்டும். அப்போது தான் சமுதாய சீரழிவுகள், அரசியல் ஒழுங்கீனங்கள், பொருளாதார தவறுகள் களையும் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதற்காகவே பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×