search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poll duties"

    எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய மராட்டியத்தை சேர்ந்த கலெக்டருக்கு தேர்தல் பணியாற்ற 5 ஆண்டு தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #ElectionCommission #AbhimanyuKale
    மும்பை:

    மராட்டியத்தில் பண்டாரா-கோண்டியா தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இதனால் காலியான பண்டாரா-கோண்டியா தொகுதிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மதுக்கர் குகடே(காங்கிரஸ் ஆதரவு), பா.ஜனதா வேட்பாளர் ஹேமந்த் பட்லேயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.



    இதற்கிடையே தேர்தலின்போது பண்டாரா-கோண்டியா தொகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாகின. இதனால் 49 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

    இதுதவிர பூச்சி தாக்குதலால் விளைபயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விடுமுறை நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்குமாறு கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே தேர்தல் சமயத்தில் உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த உத்தரவு பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் மாவட்ட கலெக்டர் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதைத்தொடர்ந்து கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இந்தநிலையில் அபிமன்யு காலே 5 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தல் பணியிலும் ஈடுபடுவதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    இது குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், ‘பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பொதுவாக தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் அங்கு பின்பற்றப்படவில்லை. அபிமன்யு காலே மீதான நடவடிக்கைக்கு விவசாயிகள் நிவாரணம் தொடர்பான சர்ச்சையும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணம் கிடையாது’ என தெரிவித்தார்.  #ElectionCommission #AbhimanyuKale  #Tamilnews 
    ×