search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pon Radhakrishna"

    சட்டமன்றத்துக்கு செல்லாமல் புறக்கணித்து இருப்பது அ.தி.மு.க. அரசுக்கு மறைமுகமாக தி.மு.க. துணை போகும் சந்தேகத்தைதான் ஏற்படுத்தி இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PonRadhakrishnan
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.20 லட்சமாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. பயங்கரவாதிகள் பஸ்சுக்கு தீ வைத்ததில் ஒரு பெண் பலியாகி இருக்கிறார். அந்த குடும்பத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள்.

    பிரிவினைவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க தி.மு.க. தயங்குவது ஏன்? பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் தண்டிக்க வேண்டும் என்று சொல்லக்கூட தி.மு.க. தயங்குவது ஏன் என்று புரியவில்லை.

    தமிழகத்தில் நடந்து வரும் பல வி‌ஷயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது. முக்கியமான பொருள் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தை புறக்கணித்து விட்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    அரசியல் நாடகத்தை அரங்கேற்றி போலியான சட்டமன்ற கூட்டங்களை கட்சி அலுவலகத்திலும் திருச்சி, சேலம், திருநெல்வேலி நகரங்களிலும் நடத்துகிறார்கள். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு அனுப்பினார்கள்.

    எம்.எல்.ஏ. என்ற கடமையை மறந்து, எதிர்க்கட்சிகள் என்ற கடமையில் இருந்தும் தவறி இருக்கிறார்கள்.


    சட்டமன்றத்துக்கு செல்லாமல் புறக்கணித்து இருப்பது அ.தி.மு.க. அரசுக்கு மறைமுகமாக தி.மு.க. துணை போகும் சந்தேகத்தைதான் ஏற்படுத்தி இருக்கிறது.

    சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள் என்றால் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தி.மு.க.வும், காங்கிரசும் சமஅளவு காரணமாக இருந்ததை ஆளும் கட்சியால் வெளிக்காட்டப்படும்  ஆபத்து இருக்கிறது.

    அ.தி.மு.க. செய்த தவறுகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய ஆபத்தும் உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

    அதனால்தான் அவர்களுக்குள் இப்படி ஒரு உடன்பாட்டை போட்டு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. தனது போலித்தனமான அரசியல் விளையாட்டுக்களை விட்டு விட்டு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எதிரொலிப்பது மட்டுமே வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

    தவறுகளை திரைக்குப் பின்னால் மறைக்கும் முயற்சிதான் இது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMK #PonRadhakrishnan
    ×