search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "possibility"

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். மேலும் பொருளாதார தடைவிதித்தது.

    இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

    ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும். இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

    இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அந்த நாட்டுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார்.

     ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஷரிப், திங்கட்கிழமை இந்தியா வந்திருந்தார். தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பத்திரிகைகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ஷரிப், ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை’’ என்று கூறியதாக முன்னணி பத்திரிகை கியோடோ செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வாய்ப்பில்லை.
    ×