என் மலர்
நீங்கள் தேடியது "Prasaram"
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
- நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.
சென்னை:
தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.
நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.
பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.
கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
- ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
- அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
உசிலம்பட்டி:
மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-
நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- இரு கட்சி தொண்டர்களும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் வருகிற 25-ந்தேதி 6- வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களுக்கு இருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
டெல்லியில் பாரதீயஜனதாவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் ஒன்றாக கைகோர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரசும் களம் இறங்கி உள்ளது.
டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மது பான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். இதையடுத்து அவர் உடனடியாக பிரசாரத்திலும் குதித்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் லால் பாக் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுடன் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டனர். இரு கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
ஜகாங்கீர்பூரி என்ற பகுதியில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் உதித் ராஜ் (வட மேற்கு டெல்லி) கன்னையாகுமார் (வட கிழக்கு) ஆகியோர் கெஜ்ரிவாலுடன் இணைந்து கொண்டனர். காங்கிரசை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
எங்கள் கட்சி சிறியது தான். நானும் சிறியவன் தான். ஆனால் எங்கள் கட்சி (ஆம் ஆத்மி) டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது.என்னை எதற்காக ஜெயிலில் அடைத்தார்கள் என தெரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்.
டெல்லியில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடம் கட்டியது, பொது
மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தது தான் நான் செய்த குற்றமா? நான் மீண்டும் ஜெயிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் தாமரைக்கு (பா.ஜ.க.) ஓட்டு போட்டால் மறுபடியும் நான் ஜெயிலுக்கு சென்று விடுவேன். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அனுமன் ஆசீர்வாதம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 4 இடங்களில் ரோடு ஷோ நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது 3 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தி உள்ள
தால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பிரசாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்று இரு கட்சி தொண்டர்களும் பம்பரமாக சுழன்று இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
இதை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
- பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.
பாட்னா:
பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.
வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.
லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
- திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
- எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் வேனில் சென்று தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அவர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 7-ந்தேதி (திங்கட்கிழமை) திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
8-ந்தேதி நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
விக்கிரவாண்டியில் அவர் பேசும் 8 இடங்களிலும் திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
- காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
- தாராவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமதி ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் விஜய்வசந்த் எம்பி, பிரசாரம் ஆரம்பிக்கும் முன்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும்.
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் தி.மு.கவும், கருணாநிதியும் பல துரோகங்களைச் செய்துள்ளனர். அதனை பொறுக்க முடியாமல் தான் நாம் தமிழர் இயக்கம் உருவானது.
நாட்டு மக்களுக்கு மொபைல்போன், கார் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க அரசிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க அரசிடம் திட்டம் இல்லை. நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும். இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. சாராய விற்பனையைத் தவிர இவர்களுக்கு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை.
எனவே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, நான் வாக்காளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாங்கள் குறைகேட்க வரவில்லை. குறைதீர்க்க வந்திருக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில், சோம்பி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர்.
அவர்கள் தினம் ஒரு மரம் நட்டிருந்தால் கூட பூமி பசுமையாகி இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் முன்பு இந்தி திணிக்கப்பட்டது.
இப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலை நிமித்தமாக குடியேற்றம் செய்யும் சதி நடக்கிறது. இதனை தடுத்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை வழங்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்.
மக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்தை கட்டிக் காட்ட முடியுமா? பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்லும் நாளை நான் உருவாக்குவேன். நீங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லி பெரியார் நம்மை ஏமாற்றினார். அதில் நானும் ஏமாந்தேன்.
திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள். மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கில் தொடங்கட்டும். இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.
- திராவிடம் என்பது கட்டுக்கதை.
ஈரோடு:
ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.
நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.
தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.
நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.