என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president"

    • இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிட அனுமதி.
    • வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்த ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.

    குடியரசுத்தலைவரின் சொந்த படைப்பிரிவான மெய்க்காப்பாளர் பிரிவு, இந்திய ராணுவத்தில் குடியரசுத்தலைவரின் வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை பெறுகின்ற தனித்துவம் மிக்க ஒரே படைப்பிரிவாகும்.

    இந்நிலையில் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலருக்கு வெள்ளியாலான தாரை இசைக்கருவியும், அதற்கான பதாகையும், வழங்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார்.

    சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த விழாவில், வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பெற்றுக் கொள்வார். இதைத் தொடர்ந்து இந்த இசைக்கருவியும், பதாகையும் வழங்கப்படுவதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.

    இந்த சிறப்புக் காட்சியை www.presidentofindia.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிடும் அனுமதியை பெறலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்.
    • மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பருவம் தவறி அதிக அளவு மழை பெய்வது அதிகரித்து விட்டது.
    • நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது:

    நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.

    அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது. 


    சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழை பெய்வது அதிகரித்துவிட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும். 

    தண்ணீரை பயன்படுத்துவது மற்றும் மறு சுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மூலமே நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைக்க முடியும். நீர் வளத்தை கவனமாக கையாள அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை இந்தி பேசாத மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 22 வது வட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிவன் தியேட்டர் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு

    மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்வராஜ், வடக்கு மாநகர செயலா ளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ், அண்ணா காலனி தொகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், 1 மண்டல தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமை வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டம ன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம் , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரி ந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

    தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பாஜக காரர்களைப் போல பேசி வருகிறார் , ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரு ம்போது அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் பா.குணராஜ், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, வடக்கு மாவட்ட நிர்வாகி திலக்ராஜ், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாணவரணி அமைப்பாளர் தளபதி அன்பு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், அனுஷ்யா, பத்மாவதி, பிரேமலதா கோட்டாபாலு, வேலம்மாள், வடக்கு மாவட்ட நிர்வாகி அன்பழகன், மாநகர நிர்வாகி பாக்கியராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் பாக்கியராஜ், ஜான் வல்தாரிஸ்,பகுதி நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
    • திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    இதற்கிடையே, மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.

    திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரியின் அந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையில் உள்ளது. அது திரிணமுல்லின் கருத்து இல்லை. ஜனாதிபதி மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது என தெரிவித்தது.

    • ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு திரிணாமுல் கண்டனம் தெரிவித்தது.
    • திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன.
    • நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:

    குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும் நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டு வருகின்றன. 


    தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன. சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

    பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும். பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும்.

    நீங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும். அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை, வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
    • மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும். 


    மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாட்டின் உணவு பாதுகாப்பை பஞ்சாப், அரியானா மாநிலங்கள் உறுதி செய்துள்ளன.
    • சமூக நலனுக்காக தொழில்நுட்பத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    அரியானா மாநித்தில் உள்ள குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று உலகம் முழுவதும் அதிவேக மாற்றத்தில் உள்ளது. தொழில்நுட்ப புரட்சி காரணமாக வேலைவாய்ப்புகள், மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு குருஷேத்ரா என்ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும். 


    இந்திய வேளாண்மை மேம்பாட்டில் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் உணவு பாதுகாப்பை இந்த மாநிலங்கள் உறுதி செய்துள்ளன. அதேசமயம் காற்று மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு இந்த பிராந்தியத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் சாதாரண மக்கள் தொழில்நுட்பத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சமூகத்தின் நலனுக்காக தொழில்நுட்பம் பயன்பட்டால் அதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். சமத்துவமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விருது பெறுவோரை தேர்வு செய்ய மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
    • சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.

    2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும்.
    • மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.

    மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் இலக்கை எட்டி ஏராளமான மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர். 


    ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காணொலிக் காட்சி மூலம் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் இரவு திருமலையில் தங்கி ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராக சுவாமி கோவில், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    தொடர்ந்து ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்லும் அவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், கலந்துரையாட உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×