search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Company Worker"

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருபுவனை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கெங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. (வயது 39). இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

    திருப்பதி கடந்த 6 மாதமாக திருபுவனையில் உள்ள நைலான் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி அவர் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் திருப்பதி வெளியே எங்கும் செல்லாமல் தொழிற்சாலை குடியிருப்பில் இருந்தார்.

    மாலையில் இதே தொழிற்சாலையில் பணிபுரியும் அந்தோணி என்பவர் திருப்பதியை பார்க்க வந்தார். அப்போது திருப்பதி பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் தொழிற்சாலை காவலாளி உதவியுடன் திருப்பதியை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திருப்பதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது30). இவர் சேதராபட்டில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அய்யனார் (30) இவர் ஒதியம்பட்டில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று மாலை இவர்கள் இருவரும் பிள்ளையார்குப்பம் கூனிமுடக்கு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். மதுபான கடை வாயிலில் இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (30) மற்றும் இவரது நண்பர்கள் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகியோருக்கும் இடையே மோட்டார் சைக்கிள்கள் உரசிக்கொண்டதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுமோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த சந்திரன் தரப்பினர் இரும்பு பைப்பாலும், தடியாலும் அழகப்பனையும், அய்யனாரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அய்யனார் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×