search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private police are actively searching"

    • ரூ.9 லட்சம் பறிமுதல்
    • 2 பேருக்கு வலைவீச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(40), பைனான்சியர். இவர் கடந்த 7-ந் தேதியன்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பைனான்ஸ் கலெக்சன் பணம் ரூ.15 லட்சத்துடன் தனது காரில் அம்மூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் கத்தாரிகுப்பம் கிராம வனத்துறை செக் போஸ்ட் அருகே கார் சென்ற போது பின்னால் வந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் 4 பேர் வேகமாக வந்து கையில் கத்தியுடன் சரவணன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து, கத்தியை காட்டி சரவணன் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் மர்ம நபர்கள் சென்ற கார் வயல் வெளியில் இறங்கி விட்டதால் காரை அங்கேயே விட்டு விட்டு 4பேரும் பணத்துடன் தப்பி விட்டனர்.

    சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    மர்ம நபர்களை பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின் பேரில் , போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் ,ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், சஞ்சீவிராயன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர் போன்ற பகுதிகளில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கார் உரிமையாளரிடம் , அவரது நண்பர்கள் வேலைக்காக காரை எடுத்து செல்வதாக கூறி எடுத்து வந்து வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று பொன்னை அடுத்த அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 2 வாலிபர்களை சிப்காட் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    அவர்கள் பெங்களூரை சேர்ந்த எல்லப்பா(28) சென்னவீரப்பா(22) என தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து எல்லப்பா, சென்னவீரப்பா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9லட்சத்து 40ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×