search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public road blocked"

    ஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). விவசாயியான இவரது மனைவி லட்சுமி(48). இவர்களுக்கு பிரகாஷ்(20) என்ற மகனும், 23 மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்ட சகோதரிகள் இருவரும் கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், உறவினர்கள், தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சகோதரர் பிரகாஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான சகோதரிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டனரா? அல்லது வேறு எவரேனும் கடத்தி இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் காணாமல் போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், வசந்த், வெங்கடேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் போலீசார் கூறுகையில், காணாமல் போன சகோதரிகள் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவர்களை கண்டுப்பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

    குடிநீர் வாரியம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.

    பெரம்பூர் தீட்டிதோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க இயலாத நிலையில் இருப்பதால் அதனை வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.


    குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பேப்பர் மில் சாலைக்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் வழியில் நிறுத்தப்பட்டன. கார், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத படி நின்றன.

    தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ஆனாலும் 2 மணி நேரம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாற்று பாதை வழியாக சென்றனர்.

    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லா கவுண்டம்பட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. கடும் வெயில் காரணமாக ஆள்துளை கிணற்றிலும் தண்ணீர் குறைந்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று காலை குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் முள் செடிகளை வெட்டி போட்டும், சிறிய கற்களை குறுக்காக போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்களுக்கு காடப்ப நல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். மேலும் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சும் நிற்பதில்லையாம். இதை கண்டித்தும் குடிநீர் சீராக வழங்க கோரியும் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் குதிரைக்கல் மேட்டில் உள்ள பவானி- மேட்டூர் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று காலை 6.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்தனர். மேலும் பஞ்சாயத்து செயலாளர் கணேசனும் சென்றார். அவர் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டியபுரம் கிராமத்தில் ஆசாரிபட்டறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தான் குடிநீர் வழங்க முடியவில்லை. பணிகள் சரி செய்து முடித்ததும் உடனடியாக குடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ஆனால், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து காலி குடங்களை எடுத்துக் கொண்டு வந்து இன்று காலை ஓமலூர்- தின்னப்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, நீங்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே நீங்கள் மறியலை கைவிடுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மின் இணைப்பு வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏராளமான தென்னை மரங்கள், மின்கம்பங்கள் கஜா புயலில் சாய்ந்தன.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தும், அடிப்படை வசதியான குடிநீர், உணவு, மின்சாரம் கேட்டும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி, தோப்படித்தெருவில் உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருத்துறைப்பூண்டியை அடுத்த பாமணி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மின்வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பேராவூரணியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த பொன்காடு பகுதியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அங்கு இன்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேராவூரணி ஆதிமுத்து சரோஜா சினிமா தியேட்டர் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உதவி செயற்பொறியாளர் ராதாகிஷ்ணன் பேராவூரணி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு அவ்வைநகரில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டது. இன்று வழக்கமாக வழங்கப்படும் லாரி குடிநீரும் வழங்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு உடனே லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    குத்தாலம் அருகே புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். #waterissue

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் உள்ள புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலங்குடி புதுக் குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையான புதுக்குளம் வாய்க்காலில் சிலர் கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்தி, தண்ணீர் செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் தற்போது காவிரி ஆற்றில் செல்லும் நீர் புதுக்குளத்துக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, புதுக்குளத்துக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் 50 பேர் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர். தாசில்தார் சபீதாதேவி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #waterissue

    திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே செல்லமந்தாடி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டியில் தண்ணீர் தேக்கி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாத காலமாகவே ஆள்துளை கிணற்றில் நீர் வற்றி விட்டதால் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அந்த தண்ணீரும் சில நாட்களாக கிடைக்காததால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொது மக்கள் இன்று திண்டுக்கல்-பழைய கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி எர்ணாவூர் நாராயணன் தலைமையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இன்று எர்ணாவூர்- எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை எர்ணாவூரில் நகராட்சிக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கட்டிடம் கட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது ரூ.1 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளிக் கட்டிடத்துக்கு கட்டிடம் கட்டித்தரக்கோரி எர்ணாவூர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணன், செயலாளர் சசிதரன், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகி மாடசாமி தலைமையில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் இன்று எர்ணாவூர்- எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×