search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
    • பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி வார்டு எண்- 4 ஜெயா நகர் மற்றும் பாரதி நகர் அப்பார்ட்மெண்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பித்தல் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பார்வையிட்டார்.

    மேலும் அங்குள்ள பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். அப்போது பகுதி செயலாளர் பட்டுலிங்கம், கவுன்சிலர் எஸ். எம். எஸ் .துரை, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்தகோபால், சிவராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.  

    • பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
    • புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

    சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

    இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • தூய்மைப் பணியாளா் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான காசோலை அமைச்சா் வழங்கினாா்.

    திருப்பூர் :

    தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:- தாராபுரம் நகராட்சியின் பொது விவரங்கள், குடிநீா் விநியோகம், செயல்பாட்டில் உள்ள திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் முழு கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து, தாட்கோ சாா்பில் ஒரு பயனாளிக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், 26 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, ஆவின் பொதுமேலாளா் சுஜாதா, தூய்மைப் பணியாளா்கள், மாநில நலவாரிய துணைத்தலைவா் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
    • மணல் லாரிகள் வள்ளிமேடு, அவலூர், வாலாஜாபாத் பாலாற்று தரை பாலம் வழியாக செல்கின்றன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள நெய்யாடிவாக்கம் ஏரியை தூர்வாருவதற்காக அங்கு மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு விதிமுறை மீறி சுமார் 20 அடி வரை மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மேலும் ஏராளமான லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் இந்த மணல் அங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது. அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மணல் லாரிகள் வள்ளிமேடு, அவலூர், வாலாஜாபாத் பாலாற்று தரை பாலம் வழியாக செல்கின்றன.

    தற்காலிக பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், இது போன்ற கனரக வாகனங்களால் முற்றிலுமாக சேதம் அடையும் அபாயம் உள்ளது. நெய்யா டிவாக்கம், காவாங்கண்டலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதி மற்றும் தூசுகளால் விளை நிலங்கள் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.
    • மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 52 வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனை தற்போது ஓரளவு சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் அதே போல் சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும் எனவும் தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மேலும் முதியோர் உதவித் தொகை , மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஏராளமான பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பணிவுடன் கேட்டு அறிந்த எம்.எல்.ஏ., உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுல்தான்பேட்டையிலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் அமர்ந்து, குடிநீர் சீராக விநியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் , திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் , மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி முத்துபரமேஸ்வரி , மங்கலம் வருவாய்த்துறை அதிகாரி கலையரசன் மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • மண் சேறு பூசியபடி உலா வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது.

    குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதி கள் சமீப காலமாக விரி வாக்கம் பெற்று வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி வருகின்ற னர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்க ளாக 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் பன்னீர்செல்வம், டிரைவர். இவரது மனைவி தவமணி (39) காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் ஆயுதங்களை காட்டி அவரை மிரட்டி 5¾ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர்.

    தொடர்ந்து கோவில் பாப்பாகுடி ஏ.ஆர். சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளை யர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட் ஏறி குதித்துள்ளனர். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு உள்ளே குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர்.

    இந்த கும்பலில் சுமார் 10 பேர் இருப்பதாக கூறப்படு கிறது. இவர்கள் 3 அணி களாக பிரிந்து சென்று குறிப்பிட்ட வீதிகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக புகுந்து பட்டா கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம். பொருட்களை கொள்ளை யடித்து செல்கின்றனர்.

    சில வீடுகளுக்குள் கற்களையும் வீசி செல்வதாக கூறப்படுகிறது. பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண் சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர்.

    இந்த 'குரங்கு குல்லா' திருடர்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஆண்டு இேத போன்ற புகார்கள் வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் குரங்கு குல்லா திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள நெய்தல் கோடை விழா-2023 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நெய்தல் கோடை விழா- 2023 நிகழ்ச்சி நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.

    விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தோட்டக்கலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை, காவல்துறை (ம) போக்குவரத்து துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்துள்ளார்.
    • அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு (வயது 21). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவரது தந்தை பழனியுடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அம்மு நேற்று கள்ளக்கிணறு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சல் போட்டதாகவும், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அம்முவை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி முடிந்து வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
    • குழாய் உடைப்பு, நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன.

    அவிநாசி :

    கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி ரூ. 1,756 கோடி செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி முடிந்து வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது. வெள்ளோட்டத்தின் போது ஆங்காங்கே குழாய் உடைப்பு, நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன.

    இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் அவ்வப்போது இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். திட்ட துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

    இம்மாதம் திட்ட தொடக்க விழா நடக்கும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார். ஆனால், வெள்ளோட்டம் பார்க்கும் பணி 50 சதவீதம்தான் முடிந்துள்ளது. அடுத்த மாத இறுதியில்தான் வெள்ளோட்டம் முடியும் என கூறப்படுகிறது. அதேநேரம் ஜூலை மற்றும் ஆகஸ்ட மாதத்தில் பருவமழை பெய்யும் என்ற நிலையில் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் காலிங்கராயன் அணையை தாண்டி உபரியாக வெளியேறும். அப்போது மட்டுமே ஆறு நீரேற்றங்களுக்கும் தண்ணீரை பம்ப் செய்து முழுமையாக நீர்செறிவூட்டும் பணியை செய்ய முடியும். எனவே திட்ட துவக்க விழா என்பது இன்னும் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகும் வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே திறப்பு விழா குறித்த அறிவிப்பை உள்ளூர் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.ஆனால் வெள்ளோட்டம் பார்க்கும் பணி முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து துவக்க விழா குறித்த தேதியை அமைச்சர்கள் இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றனர். 

    பாரதி-செல்லம்மாள் சிலையை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    மதுரை

    மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள். இவர் தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்தவர். இங்கு பாரதியார் பல வருடங்களாக வசித்து வந்தார். 

    அப்போது அவரது கவி பாடும் திறமையை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்ல மனைவி செல்லம்மாள் உந்து சக்தியாக இருந்தார்.      செல்லம்மாளுக்கு கடையத்தில் சிலை வைக்க வேண்டும் என்று சென்னை திருநின்றவூர் சேவாலயா டிரஸ்ட் முயற்சி  மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக  திருநின்றவூரில் இருந்து ‘செல்லம்மா பாரதி ரதயாத்திரை’ கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி புறப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தலைமையில் ரதயாத்திரை, நேற்று இரவு மதுரைக்கு வந்தது. செல்லம்மா பாரதி ரதம் இன்று காலை மதுரை கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.  

    மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது.

    இது குறித்து சேவாலயா ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகையில்,   “பாரதியாரின் சிலை, அவரோடு தொடர்பு உடைய எட்டையபுரம், புதுச்சேரி, சென்னை மற்றும் பல இடங்களில் உள்ளன. 

    ஆனால் பாரதியின் மனைவி செல்லம்மாளின் பிறந்த ஊரான கடையத்தில் நினைவு சின்னம் எதுவும் இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. கடையத்தில் பாரதி 2 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி உள்ளார். பாரதியாரின் அமரத்தன்மை வாய்ந்த பல கவிதைகள், அரங்கேறியது கடையத்தில் தான்.  

    அங்கு ரூ.3 கோடி மதிப்பில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைப்பது என்று சேவாலயா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அங்கு பாரதி நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு மையம் மற்றும் பாரதி தொடர்பான கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையம் ஏற்படுத்தப்படும். அந்த கட்டிடத்தின் நடுவில் செல்லம்மா பாரதி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளோம்.

    இந்த ரதயாத்திரை வருகிற 31-ந் தேதி கடையத்துக்கு செல்கிறது. அங்கு வருகிற ஜூன் மாதம் 27-ந் தேதி பாரதி செல்லம்மா சிலையை திறந்து வைக்க  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்றார். 
    ×