search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry ADMK MLA"

    விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகமான செயல் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். #Kiranbedi #Anbalagan
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவையை அறிவித்தார். விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் பேசினார்.

    ஒதுக்கிய நேரத்தைவிட கூடுதலாக அவர் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி தலையிட்டு பேச்சை முடித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து அன்பழகன் பேசினார்.

    இதனால் கவர்னர் மைக் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் விழா மேடையிலேயே கவர்னரும், அன்பழகன் எம்.எல்.ஏ.வும் ஒருவருக்கொருவர் நீ வெளியேறு, நீ வெளியேறு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது புதுவை மட்டுமின்றி, அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பான சம்பவமாக மாறியது.

    இந்நிலையில் கம்பன் கலையரங்கில் நடந்த சம்பவம் குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.

    விழாவில் குறிப்பிடாத ஒருவரை பேச வைத்ததால் ஏற்படும் விளைவு என்ன? என்பதற்கு நேற்றைய சம்பவம் ஒரு பாடம். இந்த சம்பவம் நேரம் ஒதுக்கி விழாவிற்கு வந்திருந்த மக்களை மதிக்க தவறிய செயலாகிவிட்டது.

    மக்கள் கூடும் ஒரு விழாவிற்கு தொகுதியை சேர்ந்த முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை விழாவில் பேசுவதற்காகவோ, அல்லது விழாவின் பார்வையாளராகவோ விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பது வழக்கம்.


    அந்த விழா அமைப்பாளர்கள் ஏற்பாட்டின்படி பார்வையாளராகவோ, பேச்சாளராகவோ இருப்பதுதான் மரியாதை. அதை மீறுவது தவறு. மீறி பேச அனுமதித்தால் விழாவிற்கு வந்த மக்களின் நேரத்தை கருதி குறுகிய நேரத்தில் தங்களின் பேச்சை முடிக்க வேண்டும்.

    விழாவின் வழியாக மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்திற்கு நேர்மறையான கருத்துக்களை பேசக்கூடாது. இவ்வாறு செய்வதால் விழாவின் நோக்கமே சீர்குலையும். இவ்வாறு பேசுவது தெரிந்து கொள்ள வேண்டிய பல வி‌ஷயங்களை மக்கள் இழப்பதற்கு வழி வகுக்கும். நேற்றைய சம்பவத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் எங்கே சென்றார்கள்? என்றே தெரியவில்லை.

    ஒரு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகம்.

    மற்ற வேலைகளை விட்டுவிட்டு விழாவிற்காக நேரம் ஒதுக்கி வரும் மக்களை நாம் மதிக்க கற்றுக்கொள்வது அவசியம். வருங்காலத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் இதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kiranbedi #Anbalagan
    புதுவையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும் போது கவர்னர் கிரண்பேடி மைக்கை அணைக்குமாறு உத்தரவிட்டதால் இருவருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. #Kiranbedi #Anbalagan
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

    கவர்னர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் பலர் கலந்து விழாவில் கொண்டனர். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார்.

    விழா தொடங்கியதும் அன்பழகன் எம்.எல்.ஏ. பேச அழைக்கப்பட்டார். அவர் மைக் முன் வந்து பேசினார். விழா அழைப்பிதழில் தனது பெயர் முறைப்படி அச்சிடப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர் தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டி பேசினார்.

    இவ்வாறு அவர் 15 நிமிடமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவர்னர் கிரண்பேடி அங்கிருந்த ஒரு அதிகாரியை அழைத்து 10 நிமிடத்திற்கு மேல் பேச வேண்டாம், பேச்சை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அதிகாரி அன்பழகனிடம் சென்று கவர்னர் சொல்கிறார், பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு அன்பழகன், நான் தொகுதி பிரச்சனை தொடர்பாக நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது உடனே பேச்சை நிறுத்த முடியாது என்று கூறி பேச்சை தொடர்ந்தார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி இன்னொரு அதிகாரியை அழைத்து அன்பழகனிடம் சொல்லும் படி கூறினார். அதன்படி அந்த அதிகாரியும் அன்பழகனிடம் பேச்சை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    ஆனால் அதையும் அன்பழகன் ஏற்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இது கவர்னர் கிரண்பேடிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திடீரென அவர் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தார். நேரடியாக அன்பழகனிடம் சென்று பேச்சை நிறுத்துங்கள், போதும், மற்றவர்களும் பேச வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு அன்பழகன் நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லியாக வேண்டும், எனவே நிறுத்த முடியாது எனக்கூறி தொடர்ந்து பேசினார்.

    இதனால் கவர்னருக்கு கோபம் மேலும் அதிகரித்தது. அன்பழகன் பேசிய மைக்கை துண்டித்தார். அன்பழகனை பார்த்து ‘யூ கோ’ (நீங்கள் போகலாம்) என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக கூறினார்.

    இது அன்பழகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கவர்னரை பார்த்து அவர் ‘யூ கோ’ என்று திருப்பி சொன்னார். இப்படி ஒருவருக்கொருவர் திரும்ப, திரும்ப சொன்னார்கள்.

    இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் நெளிந்தனர். பார்வையாளர்களும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

    அப்போது அன்பழகன் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சென்று என்னை எப்படி கவர்னர் அவமதிக்கலாம், இதற்கு தான் என்னை விழாவுக்கு அழைத்தீர்களா? என்று கூறினார்.

    உடனே நமச்சிவாயம் அவரை சமாதானப்படுத்த முயன்றார். அதை அன்பழகன் ஏற்கவில்லை. என்னையும், என் தொகுதி மக்களையும் மேடையில் அவமதித்து விட்டார்கள். கவர்னர் நடந்து கொண்டது ஆணவமான செயல் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார். பின்னர் அவர் விழாவை புறக்கணித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார்.

    ஒரு கவர்னருக்கு எம்.எல்.ஏ.விடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூட தெரியவில்லை. அவர் நடந்து கொண்டவிதம் என்னை மட்டும் அல்ல ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களையே அவமதிக்கும் வகையில் இருக்கிறது.

    எனது தொகுதியில் விழா நடக்கிறது. நான் தொகுதி பிரச்சனை பற்றி, தொகுதி மக்களுக்காக இங்கு பேசிதான் ஆக வேண்டும். அதைத்தான் நான் பேசினேன்.

    ஆனால் என்னை பேச விடாமல் தடுத்து எனது மைக்கையே கவர்னர் துண்டிக்கிறார். அவருடைய பதவிக்கு இது அழகல்ல. அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை புகார் கொடுப்பேன். என்னை அவமானப்படுத்தியதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    டெல்லியில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு குறுக்கு வழியில் கவர்னராகி உள்ள கிரண்பேடி புதுவை எம்.எல்.ஏ.க்களை அவமதிக்கிறார். இது புதுவை மக்களையே அவமதிக்கும் செயலாக நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.  #Kiranbedi #Anbalagan

    ×