search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pugazhendi"

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் குறித்த விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி இன்று ஆஜரானார். #Pugazhendi
    பெங்களூரு:

    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறை துறை சூப்பிரண்டாக இருந்த ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. சசிகலாவுக்கு சிறையில் சலுகை செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த குழு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    சலுகை செய்ய லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படைதான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் கூறி இருந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூபா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வு பெற்ற சிறை துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ், புகார் கொடுத்த ரூபா மற்றும் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோருடன் விசாரணை நடத்தினர்.

    சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் வெளியான தகவலால் மீண்டும் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

    இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி நேரில் ஆஜரானார். அவரிடம் ஊழல் தடுப்பு படை துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Pugazhendi

    ×