search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punnakayal St. Thomaiyar Temple"

    • இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.
    • புனித தோமையார் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    தமிழ்நாட்டில் தமிழ்மொழி முதன்முதலாக அச்சேறிய இடம், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல்.

    வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் தாமிரபரணி ஆறு 5 கிளைகளாக பிரிந்து கடலில் ஐக்கியமாகிறது. அவற்றின் நடுவில் கடலின் முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வந்தடைந்து கிறிஸ்தவத்தைப் போதித்தார். பின்னர் தமிழகத்திலும் வேதத்தைப் போதித்தார்.

    அவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் புன்னக்காயலில் அவரது நினைவாக ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில், ஏராளமான புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புன்னக்காயலுக்கு வந்து, புனித தோமையார் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளின் வழியாகவும் நடந்தே புனித தோமையார் ஆலயத்துக்கு செல்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் படகில் பயணித்து புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தவக்காலத்தில் ஏராளமானவர்கள் இங்கு வந்து புனிதரை தரிசிக்கின்றனர். இங்கு புனிதர் நிகழ்த்திய அற்புதம் ஏராளம்.

    முன்பு தாழ்த்தப்பட்ட மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபட்டதும் அவர்களின் நோய் நீங்கிற்று.

    இதையடுத்து அந்த குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக அசைவ உணவு சமைத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட பிற மதத்தினர் சமைத்த உணவு என்பதால் அதனை சாப்பிட யாருமே செல்லவில்லை.

    இதனால் வருத்தம் அடைந்த அந்த குடும்பத்தினர், தாங்கள் தயாரித்த உணவை, ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மண்ணில் குழி தோண்டி, பாத்திரங்களுடன் புதைத்துச் சென்றனர்.

    இதையடுத்து சில நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது புன்னக்காயல் ஊரையே தண்ணீர் சூழ்ந்தது. உடைமைகளை படகில் ஏற்றிக்கொண்டு மக்கள் கடலின் முகத்துவாரம் வழியாக வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முகத்துவாரத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆலய வளாகத்தில் அடுத்தவேளை உணவின்றி, கடும் பசியுடன் துயருற்று சோர்வுடன் கண் அயர்ந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், "ஏன் உணவில்லாமல் அனைவரும் வாடுகிறீர்கள்? இங்குதான் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளதே?" என்று ஓரிடத்தை காட்டி விட்டு மறைந்தார்.

    அப்போது அங்கு சுடச்சுட சாதம் வடித்து, கறிக்குழம்பு வைத்த மணம் நிலத்துக்கு அடியில் இருந்து வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டியபோது, அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்த சாப்பாடு, கறிக்குழம்பு நெடுநாட்களாகியும், கெட்டுப் போகாமல் அப்போது சமைத்த நிலையிலேயே சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

    அதனை எடுத்து சாப்பிட்டு பசியாறிய மக்கள், மேலும் 2 நாட்கள் வைத்து அவற்றை ருசித்து சாப்பிட்டனர். அதற்குள் வெள்ளமும் முழுமையாக வடிந்ததால் மக்கள் தங்களது வீடுகளுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.

    சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சமத்துவமாக வாழ, புனித தோமையாரே நேரில் வந்து தங்களுக்கு உணர்த்தியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணற்ற புதுமைகளை புனிதர் நிகழ்த்தியதாக தெரிவிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளை மக்கள் கடந்து செல்லும்போது, யாரேனும் வழி தவறி சென்றால், அவர்களுக்கு முன்னால் நாய்கள் நீந்திச் சென்று ஆலயத்துக்கு வழிகாட்டி அழைத்து வந்து சேர்ப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சாதுவான நாய்கள் சுற்றித் திரிவதை எப்போதும் காண முடியும். ஆற்றைக் கடக்கும்போது பாதைக்காக ஆங்காங்கே கொடிகளை நட்டு வைத்துள்ளனர். புனித தோமையார் ஆலயத்தின் முகப்பில் 2 சிலுவைகள் உள்ளன.

    அவற்றில் ஒரு சிலுவையை தோமையார் நிறுவி வழிபட்டதாகவும், மற்றொரு சிலுவை கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை ஆலயத்தில் நிறுவி வழிபடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    ×