search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radish Koku"

    • பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை.
    • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள்.

    முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை வைத்து எப்படி காரசாரமான துவையல் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி- கால் கிலோ

    சின்ன வெங்காயம்- 10

    காய்ந்தமிளகாய்- 4

    மல்லி - ஒரு ஸ்பூன்

    வேர்கடலை- ஒரு ஸ்பூன்

    கடலை பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- நெல்லிக்காய் அளவு

    பூண்டு- 4

    செய்முறை:

    முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் மல்லி சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

    மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    ×