search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway gate"

    • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

    இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

    ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

    இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

    தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல ரெயில்வே கேட் உள்ளது.

    இது திருவொற்றியூர் மேற்கு பகுதி மற்றும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இடம் ஆகும். தினந்தோறும் சுமார் 60 முதல் 70 ரெயில்கள் வரை இந்த பாதை வழியாக செல்வதால் பெரும்பாலும் மூடிகிடக்கும். இதனால் இந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபக்கத்திலும் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தற்போது ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத்தெடர்ந்து விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடி செலவில் 343 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. 1½ ஆண்டுகளில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விம்கோ நகர் ரெயில்வே சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது பல ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
    • பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கத்தில் செல்கின்றன.

    இதில் புதன்கிழமை மட்டும் விழுப்புரத்தில் இருந்து 7 ரெயில்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 ரயில்கள் என 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இன்று காலை 9.55 மணிக்கு நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

    இதனிடையே இந்த ரெயில் சில வினாடிகளிலேயே சிக்னல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பொதுவாக ெரயில்கள் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கேட் அடைக்கப்படுகிறது.

    இன்று காலை இந்த ரெயில் நீண்ட நேரம் ஆகியும் கேட்டை கடக்கவில்லை. இதனால் இந்த ெரயில்வே கேட் பகுதியில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ெரயில்வே கேட் எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் எதிர்பார்ப்புடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கேட் கீப்பரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் மாற்று பாதையில் செல்ல முடிவு செய்து புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் கழித்து சிக்னல் கிடைத்தது. அதன் பின் நியூ டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதயைடுத்து ெரயில்வே கேட்டுகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்த நிலையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர்.இதனால் அந்த இடத்தில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சிக்கலான போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தில் மேம்பாலம் அமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 20 நிமிடங்களுக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
    • மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மண்டபம்

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ெரயில் மார்க்கமாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அயோத்தி, புவனேஸ்வர், ஓகா ஆகிய வட மாநிலங்களுக்கு வாராந்திர ெரயில்கள், திருப்பதிக்கு வாரம் 3 நாள், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு தினசரி ெரயில்கள், கோவை வாராந்திர ெரயில், கன்னியாகுமரிக்கு வாரம் 3 நாள் ெரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் விழா காலங்களில் பல்வேறு நகரங்க ளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ராமேசு வரத்திற்கு மட்டும் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    ெரயில்கள் இயக்கத்தின் போது ராமேசுவரம்- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி, இருமேனி ஆகிய 2 இடங்களில் ெரயில்வே கேட் மூடப்படு கிறது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், பிற நகரங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் வாகனங்கள் ெரயில்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கும் நிலை இதுநாள் வரை தொடர்கிறது. மதுரை- ராமேசுவரம் ெரயிலுக்கு கேட் மூடப்படும்போது இந்த வழித்தடத்தில் ெரயில் கடந்து செல்ல குறைந்த பட்சம் 10 நிமிடங்களாகிறது. அதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. அதைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்கும் அரசு பஸ்கள் பயண நேரத்தை ஈடுகட்ட எதிரெதிரே முண்டியடிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

    இரவு நேரத்தில் ராமேசுவரம்- சென்னை, மதுரை- ராமேசுவரம் ெரயில்கள் சந்திப்பிற்காக மூடப்படும் இந்த கேட் 20 நிமிடங்களுக்கு பின் திறக்கப்படுகிறது. அவசர சிகிச்சை ஆம்புலன்சுகள் சில நேரங்களில் சிக்குவதால் உயிருக்கு போராடுபவரின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, தாமதமாகும் சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.என். நாகேஸ்வரன் கூறுகையில், தற்போது பாம்பன் பாலத்தில் புதிய ெரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து ெரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பாசஞ்சர் ெரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதனால் தற்போது குறைந்த அளவு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் செல்கிறது. அதனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ெரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. பாம்பனில் புதிய ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு ெரயில் சேவைகள் தொடங்கிய பிறகு அனைத்து ெரயில்களும் ராமேசுவரம் வரை செல்லும். அப்போது காலை, மாலை நேரங்களிலும் அதிக நேரம் ெரயில்வே கேட் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது. மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி க்கொண்டு தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூகையூர் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ரெயில்வே கேட்டில் நின்ற கொண்டிருந்த லாரி பின்னால் வந்தது.

    லாரி ஓட்டுனர் பிரேக் போட முயற்சித்தும், லாரி நிற்காமல் பின்நோக்கி சென்றது. இதனைக் கண்ட சின்னதுரை, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார். லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிய மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. எகிறி குதித்ததில் சின்னதுரையும், அவரது தாயாரும் லேசான காயங்களு டன் உயிர்தப்பினர். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வழியே ரெயில்கள் வரும்போது ரெயில்வேகேட்டை பூட்டி விட்டு பின்னர் ரெயில் கடந்து சென்ற பின்னர் திறப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு சென்னை நோக்கி சென்ற ரெயிலுக்காக ஊழியர் ஆனந்த் ரெயில்வே கேட்டை மூடினார். பின்னர் அவர் அங்குள்ள ஓய்வு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி தூங்கி விட்டார்.

    ரெயில் கடந்து சென்ற பின்னரும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணியை தாண்டியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்த போது ஊழியர் ஆனந்த் குறட்டை விட்டு தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை தட்டி ஆனந்தை தூக்கத்தில் இருந்து எழச்செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது. பதறியடித்தபடி அவர் ரெயில்வே கேட்டை திறந்து விட்டார்.

    எனினும் கடும்கோபத்தில் இருந்த வாகன ஓட்டிகள் ஊழியர் ஆனந்த்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் கடந்த பின்னரும் ஊழியர் ஆனந்த் சுமார் 20 நிமிடம் ரெயில்வே கேட்டை திறக்காமல் இருந்திருப்பது தெரியவந்து உள்ளது. ரெயில் வரும் நேரத்தில் அவர், ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கேட் கீப்பர் விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திடீர் என கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, 2 தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, அறைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தீ வைக்க முயற்சி செய்தது நான் தான், வழக்கு போட்டாச்சா? என்று துணிச்சலுடன் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் அவர் யார் என்று விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (25) என்பதும், அவர் கடந்த 19-ந் தேதி இரவில் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் ரெயில்வே கேட் வழியாக வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது ரெயில் வந்ததால் கேட் மூடப்பட்டதும், பிச்சைக்கண்னு கேட்டை திறக்க கோரி ரகளையில் ஈடுபட்டதும், எனினும் ரெயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் பிச்சைக்கண்ணு நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே விரளபெருந்செல்வி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி போலீசார் கருங்குளத்தில் தலைமறைவாக இருந்த, பிச்சைக்கண்னுவை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜனை தாக்கினார். எனினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை, ஏற்படுத்தி உள்ளது.

    • சோழவந்தானில் ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதனால் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்காக ெரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சோழவந்தான் ெரயில்வே கேட் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர்

    தண்டவாள பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வரும்போது ெரயில்வே கேட்டை திறக்க முடியாததால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகையால் ெரயில்வே துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன.
    • சிக்னல் பழுதால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நேற்று மாலை திடீரென பழுதடைந்தது.

    இதனால் அந்த நேரத்தில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது வேகத்தை குறைத்து வள்ளியூர் ரெயில் கிராசிங்கை மெதுவாக கடந்து சென்றன. சிக்னல் பழுதடைந்ததினால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதன்பின்னர் உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர்.

    • தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
    • ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.

    • அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.

    பணகுடி:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ரெயில்வேகேட்

    அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×